சனி, 26 பிப்ரவரி, 2011

குட்டிப்பெண்கள்

விடுமுறை முடிந்து குட்டிப்பெண்கள் வந்தார்கள்.

தை  மாதம் ஐந்தாம்  திகதி இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சந்தோஷ்  (சிறுமிகளின் தந்தை) பேசினார். "ஆன்டி, உங்கள் திருமணநாள்.. பொன்விழாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள். நாங்கள் வரமுடியாது போய்விட்டது எல்லாம் நல்லவிதமாக முடிந்ததா?" என்று விசாரித்தார்.

"நீங்கள் எல்லோரும் நலமா? எப்போ வருகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நாங்கள் பன்னிரெண்டாம் திகதி இரவு ஒரு மணியளவில் வீடு வந்து சேர்வோம்," என்றார்.
போகும் போது வீட்டுத் திறப்பை எங்களிடம் தந்திருந்தார்கள். அவர்கள் வர இரண்டு நாட்களுக்கு முன்பாக  வீட்டைத்   திறந்து  சிறிது சுத்தம் செய்து குளிர்சாதன ப் பெட்டியையும் சுத்தப்படுத்தி வைத்தேன்.
main switch  அணைக்கப்பட்டிருந்தது. அது இருக்குமிடம் தெரியாததால் சனிக்கிழமை இரவு சாமத்தில் எழுந்து torch light, திறப்பு என்பவற்றுடன் அவர்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மணிக்குக் கதவருகில் வந்த குட்டிகள் நின்று விட்டார்கள். நான் கதவைத் திறந்தவுடன் "கிராண்ட்மா" என்று கட்டியணைத்தார்கள். இரண்டு மாதங்களின் பின் அவர்களைக் கண்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அனன்யா, "கிராண்ட்பா.. லொலிப்பொப்" என்று கேட்டாள். நாளை தரலாம் என்று சமாதானப்படுத்தி அவர்கள் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டோம்.
இப்போதெல்லாம் சின்னப் பெண்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள்.