இமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜூன், 2017

பொழுதுபோக்கு


என் அறையின் வெளியே கோழிக்கூடு ஒன்று இருக்கிறது - பறவைகள் தங்குவதற்கு மட்டும் அளவான அந்தச்  சிறிய கூட்டைச் சுற்றி ஒரு கம்பிவலை வேலி. 

ஜன்னல் வழியே தெரியும் கோழிகளில் ஒன்றைப் பார்த்து வரைந்திருக்கிறேன். முன்பு போல என்  விரல்கள் உறுதியாக இல்லை.

தினமும் படத்தில் சில வரிகள் கூடிக் கொண்டு வரும். பொழுது போக வேண்டுமே!

ஒரு கிறுக்கல்.
இன்னும் ஒன்று.
ஓரங்களை சாதாரண கத்தரிக்கோல் கொண்டு அலங்காரமாக வெட்ட முயற்சித்தேன்.

வர்ணம் தீட்ட முன்பே தாதி ஒருவர் கேட்டு வாங்கிப் போய் விட்டார். செய்யும் வேலை மற்றவர்களிடமிருந்து பாராட்டுப் பெறும் போது சந்தோஷமாக இருக்கிறது.

செவ்வாய், 15 ஜூன், 2010

அப்பா செய்த மேடை

வீட்டிலிருக்கும்போது நான் ஏதாவது வேலைகள் இருந்தால் மகனைத் தொட்டிலில் படுக்கவைத்து விட்டுச் செய்வேன். அவர் எழுந்துவிட்டால் இமா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுவா. சில வேளைகளில் பாட்டைக் கேட்டுக் கொண்டு மகன் திரும்ப நித்திரையாகி விடுவதுமுண்டு.

ஐந்து வயதானதும் நான் கடமையாற்றிய பாடசாலையிலேயே இமாவைச் சேர்த்தோம். அது பெண்கள் பாடசாலை. ஆனாலும் முதலாம், இரண்டாம் வகுப்புகளில் ஆண் குழந்தைகளும் படித்தார்கள். அங்கும் எனக்கு முதல் வகுப்புத்தான் (ஆண்கள் பிரிவு) கிடைத்தது.

பாடசாலையில் நடைபெற இருந்த நிகழ்வொன்றில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஏதாவது பாடல், நடனம் அல்லது நாடகம் கொடுக்க வேண்டுமென அதிபர் உத்தரவிட்டார். இரண்டு வகுப்பு மாணவர்களையும் சேர்த்து சக ஆசிரியரும் நானும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய பாடல் பழக்கினோம். உடைகள் சிறகுகள் எல்லாம் அழகாகத் தயாரித்தோம்.

குறிப்பிட்ட தினத்தன்று ஒத்திகை பார்க்க மேடைக்கு அழைத்துச் சென்ற போது இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. என்னசெய்வதென நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அதிபர் "இமா, இது உங்கள் அப்பா செய்த மேடைதான். உடையவே உடையாது," என்று சொல்லிச் சமாளித்தார். பின்னர் யாவும் ஒழுங்காக நடந்தன.

பின்னேரம் அப்பா வீடு வந்ததும், "நீங்கள் செய்த மேடையில் ஏறி நான் பாட்டுப் பாடினேன் அப்பா," என்றா.

ஞாயிறு, 23 மே, 2010

இமா குழந்தையாக


இமா குழந்தையாக இருந்த போது சமையல் செய்தாலும் உடைகள் தோய்க்கும் போதும் pram இல் இருக்க வைத்து ஏதாவது குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் சொல்லிக் கொடுப்பேன். அவவும் முடிந்தவரை திருப்பிச் சொல்லுவா. ஒன்றரை வயதிலேயே கதைக்க ஆரம்பித்து விட்டா. பாடசாலை போகையில் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுப் போவேன்.

அடுத்த குழந்தையும் கிடைக்க இருந்ததால் இடம் போதாமையால் வேறு வீடு மாற வேண்டி ஏற்பட்டது. அங்கும் ஒரு வயதான தம்பதியர் பெருமளவு உதவியாக இருந்தனர். இமாவுக்கு இரண்டு வயது நிறைவுற்றுச் சில நாட்களில் மகன் பிறந்தார்.

ஒரு மாத காலம் நான் வீட்டில் நின்றேன். பிரசவ விடுப்பு முடிந்து பாடசாலை திரும்புவதற்கு முன்னர் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை ஒழுங்கு செய்தோம். காலை ஆறரை மணி முதல் மாலை ஆறு மணி வரை தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வார். வயதான பறங்கிப் பெண் என்பதால் 'மம்மா ' என்று அழைப்போம். பிள்ளைகள் இருவரையும் மிக அன்பாகப் பராமரித்ததால் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் பாடசாலையிலிருந்து வந்ததும் மம்மா தேனீரைத் தந்த பின் "உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் தம்பியும் (அப்படித்தான் என் கணவரை அழைப்பார்,) வரட்டும்" என்றார்.

இவர் வந்ததும் "தம்பி, தங்கச்சி, நான் வேறு வேலைக்குப் போகப் போகிறேன். இமா எனக்கு நல்ல ஐடியா ஒன்று சொல்லி இருக்கிறா.' என்றா. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைச் சொன்னா.

"மம்மா உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?"

"கிழமைக்கு இருபது ரூபா "

"அவ்வளவு தானா? இது உங்களுக்குப் போதுமா?"

"போதாதுதான், என்ன செய்கிறது?"

"நீங்கள் ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும்? வேறு வேலைக்குப் போகலாமே?"

"எங்கே போவது? எனக்கு யார் வேலை தருவார்கள்?"

"நீங்கள் port cargo வில் (துறைமுக அதிகாரசபையில்) வேலைக்குப் போனால் நிறையச் சம்பளம் தருவார்கள்."

"ஓ! அப்படியா, எவ்வளவு கிடைக்கும்?"

"ஒரு நாளுக்கு நூறு ரூபா கிடைக்கும்."

"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

"நான் பார்ப்பேன்."

இப்படியே நீண்ட உரையாடல் நடக்குமாம். பின்னரும் பல முறை மம்மா சொல்லி சிரிப்பா.