வியாழன், 23 செப்டம்பர், 2010

உரையாடல்

வழக்கம் போல் சிறிது நேரம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அனிக்கா வீட்டுக்குப் போனேன்.கண்டதும் வரவேற்புப் பலமாக இருந்தது. இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். கதை தொடங்கியது."கிராண்ட்மா, உங்கள் உடை அழகாயிருக்கிறது. காதணிகளும் அழகாயிருக்கின்றன." என்றார் அனிக்கா

"அப்படியா? நன்றி.""ஆனால் நீங்கள் அழகாயில்லை." ("அப்படிச் சொல்லாதே,"

இடையே தாயின் குரல்)"குழந்தை தானே. அவளது அபிப்பிராயத்தை சொல்கிறாள். விட்டுவிடுங்கள்." என்றேன் நான்.

"உங்கள் காதணிகளை எனக்குத் தருகிறீர்களா?"

"ஏன்?"

"நான் கலியாணம் செய்யப் போகிறேன்."

"யாரை?"

"அனன்யாவை."

"அவள் உன் தங்கையல்லவா?"

"பரவாயில்லை." என்றாள் அனிக்கா.பேச்சை எப்படி மாற்றலாம் என்று யோசிக்கையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் கவனத்தை ஈர்த்தது.உடன் அடுத்த வினா."கிரான்மா, இந்தப் பிள்ளைகள் என்ன பாடுகிறார்கள் சொல்லுங்கள்," என்றாள்.

"ஹிந்திப் பாடலின் பொருள் எனக்கு எப்படித் தெரியும்?" என்றேன்.

தலையில் கைகளால் தட்டி "Use your brain," என்றாள் அனிக்கா.இந்தக்காலத்துக் குழந்தைகள் சுட்டிகள் தான்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பேரனும் பீஷும்

ஒரு முறை இனக்கலவரம் ஏற்பட்டபோது எங்கள் பகுதியிலிருந்த மக்கள் எல்லோருமே பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த நான்கு குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் தங்கி இருந்தோம்.

சுற்றி வர எங்குமே வெறிச்சோடிக்கிடந்தது. தூரத்தில் வீடுகள் எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டம். கோழிகள், ஆடுகள், பூனைகள் போன்ற பிராணிகள் உணவு தேடி அங்குமிங்குமாக அலைந்து  திரிந்தன.

எங்கள் பேரன் நன்கு பேசத்தொடங்கிய காலம்; "மியாவ், மியாவ்" என்று பரிதாபமாக ஒலி எழுப்பிற்று ஒரு பூனைக்குட்டி. பேரன் ஓடிப்போய்ப் பார்த்தார். மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்த அந்தப் பூனைக்குட்டியைப் பார்த்ததும் அதன் மேல் இரக்கம் ஏற்பட்டு மேதுவாகத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.
 " பாவம் இதற்குச் சரியான பசி. ஏதாவது சாப்பாடு கொடுக்க வேண்டும்," என்றார்.
 
அவர் விருப்பப்படியே உணவு கொடுத்து, "இதனை விட்டுவிடுவோம்," என்றோம்.

அதைத்  துரத்தி விடுவதில் அவருக்கு இஷ்டம் இல்லை. "இந்த 'பீஷ்'  (Beesh - அவர் பூனைக்கு வைத்த பெயர்.) சாப்பாடில்லாமல் செத்துப் போகும். நாங்களே வளர்ப்போம்," என்று எல்லோரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பூனைக்குட்டியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பூனை முனகலுடன் படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்த போது ஒரு காலில் கணுக்காலின் கீழே வீங்கிக் கிடந்தது. 
 
தெரிந்ததும் பேரன் அழ ஆரம்பித்து விட்டார். அவரைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகி விட்டது.

சற்று நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாட்டனிடம் முறையிட்டார். பூனையின் காலைப் பார்த்ததும் புரிந்து போனது. அதன் காலில் 'rubber band' மாட்டி இருந்தது. அதை அறுத்து விட்டதும் பூனை அமைதியாயிற்று.

பேரனும் சந்தோஷம் அடைந்தார். அது பூனையின் காலில் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொடர்மாடி இல. 9

அன்று இரவு உணவு முடித்து வழக்கம் போல மருந்துமாத்திரைகள். 'இன்ஹேலர்' எல்லாம் உபயோகித்து முடித்துப் படுக்கைக்குப் போய் விட்டேன்.
 
'டக், டக்' என்று கதவில் ஒலி. 
எழுந்து வந்து பார்த்தேன். எங்கள் மாடி யூனிட் இளம் பெண் மேர்ஸி கலவரமடைந்த முகத்தோடு.

 "என்ன விடயம்?" எனக் கேட்டேன்.
 "ஒன்பதாவது யூனிட் நண்பருக்கு என்ன நடந்தது?"

"ஏன்?"  

"கதவு பூட்டி இருக்கிறது. உள்ளே லைட் எரிகிறது. கதவில் வெளிப்புறமாகத் திறப்பு உள்ளது. பல தடவை தட்டினேன் எந்த விதமான விடையும் கிடைக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?" என்றார்.

நான் என் கணவரை அவருடன் அனுப்பினேன். இருவரும் கதவைத் தட்டிப் பார்த்த பின் காரைப் பார்த்து விட்டுப் பின் பக்கமாகப் போய், பின் பக்க மொட்டைமாடிக் கதவும் திறந்துள்ளதைப் பார்த்துள்ளார்கள்.

மீண்டும் கதவைத் தட்டிய பின் கதவைத் திறந்தால்.. உள்ளே நண்பர் கணனியில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.
 
இவர்களிருவரையும் கண்டதும் சிரித்துக் கொண்டே வரவேற்றாராம். 
 
"நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடந்ததோ என்று நாங்கள் கவலைப்பட நீங்கள் உல்லாசமாக இருகிறீர்களா?" என்று சாவியைஅவரிடம் கொடுத்து விட்டு வந்தார்கள்.  
 
அடிக்கடி இப்படி ஏதாவது குளறுபடி செய்யாவிட்டால் இவருக்கு நிம்மதியாக இராதோ ?

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜீனோவின் அழைப்பிற்கு இணங்க - செபா

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
செபா.
  
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அல்ல. எனது பெற்றோர் இருவரதும் பெயர்கள் இந்த ஆரம்பத்தைக் கொண்டுள்ளதால் அதனை என்  பெயராக்கினேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
உண்மையில் இது பற்றி முதலில் நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. 'இது இமாவின் உலகம்' வலைப்பதிவைப் பார்த்ததும் எனக்கு இப்படி ஒன்று ஆரம்பிக்கலாமென்று தோன்றியது. அதற்கான உதவியும் இமாவிடமிருந்து கிடைத்தது. இதுவே என் வலைப்பதிவு ஆரம்பமான கதை.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவும் செய்ததில்லை. அறுசுவையில் அறிமுகமானவர்கள் அன்போடு வருகிறார்கள். பாசமாகப் பேசுகிறார்கள்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நான் அனுபவித்து ரசித்த விடயங்கள் தான் எல்லாமே. விளைவு என்று சொல்வது என்றால் படிப்பவர்கள் சொல்லும் கருத்துகள், அது தரும் சந்தோஷம் இவை. 

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆம், பொழுது போக்கென்றே கொள்ளலாம்.
 
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?  
ஒரே பதிவு மட்டுமே உள்ளது. வேறு பதிவு எழுத முயலவில்லை. இதை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
 
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை ஏற்படவில்லை மற்றவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டது உண்டு. நான் எப்போதுமே மற்றவர் மீது பொறாமைப் படுவதில்லை.

9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதலில் பாராட்டியது என் மகள் இமா தான். அதுதான் மேலும் பதிவுகள் போடத் தூண்டியது.  
ஹைஷ், ஜீனோ, வானதி, அதிரா, இலா, ஸாதிகா, செல்வி, ஆசியா, சந்தனா, ஜெய்லானி, இன்னும் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து என்னை உற்சாகப் படுத்துகிறார்கள். விருது கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

 10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
நான் செபா.  
பிறந்த ஊர் மட்டக்களப்பு.  
வசித்தது: திருகோணமலை
படிப்பித்தது: மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை.  
தி/புனித மரியாள் கல்லூரி.  
தி/புனித சூசையப்பர் கல்லூரி 
கணவர் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர். பிள்ளைகள் இருவர். ஒருவர் இமா, மற்றவர் மகன். இரு பேரப் பையன்கள், ஒரு பேர்த்தி. தற்போது எல்லோரும் வசிப்பது நியுசிலாந்தில்.  
நண்பர்கள் பலர். மட்டக்களப்பு நண்பர் அத்தனை பேரின் தொடர்பும் விட்டுப் போயிற்று. இப்போது திருகோணமலை நண்பர்கள், என் மாணவர்கள்  சிலர் & அவர்கள்  குடும்பத்தாரின்  நட்புகளே தொடர்கின்றன.
இப்போது இவ்வலைப் பதிவின் மூலமாகவும் நண்பர்கள் சிலர் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.  
பிடித்தவை & பொழுது போக்குகள்:- வாசிப்பது, இயற்கை அழகை ரசிப்பது, குழந்தைகளின் குறும்புகள், நல்ல பாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது, கணினியில் தமிழ் இலக்கிய நூல்கள் வாசிப்பது, தோட்டம் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்வது. அறுசுவை இணையத்தளத்தில் கைவினைக் குறிப்புகள் சிலது வெளியாயிற்று. கடைசி இரண்டும் இப்போது முடிவதில்லை.  ஆனாலும் பார்த்து ரசிப்பேன். 
பிடிக்காதவை:- மற்றவர்களைப்  பற்றிப் பேசுவது, பொறாமைப் படுவது, காண்பவை எல்லாவற்றிலும் ஆசைப்படுவது.


ஜீனோவின் அழைப்பிற்கு  இணங்க இந்தத் தொடர் பதிவினை எழுதியுள்ளேன். எல்லோரையும் போல வேகமாக என்னால் செயற்பட முடியவில்லை. தாமதமாகவேனும் எழுத முடிந்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். அழைப்புக்கு நன்றி ஜீனோ.

அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

அன்புடன் செபா. 

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

திகைத்துப் போனேன்

எங்கள் விட்டிலிருந்து  ஐந்து நிமிட நடை தூரத்தில் எங்கள் நண்பர்
வினோத் வசிக்கிறார்.
மூன்று வருடங்களின் முன்னர் அந்த இல்லத்தை வாங்கியதுமே எங்களுடன் பழக ஆரம்பித்து விட்டார். தாய், தந்தை, ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் சேர்ந்த சிறிய குடும்பம். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்.
கடந்த கோடை விடுமுறையில் தாயகம் செல்லும் போது அவர்களது செல்லப்பிராணிக்கு (பூனைக்குட்டி) உணவு வைக்கும் படியும்  சிறிய தோட்டத்திற்கு நீர் ஊற்றி விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். 
அதற்காக அங்கு போய் வரும் போது இரவு வேளையில் வீட்டில் தங்கும் அவரது நண்பர் பண்டார என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் நன்றாகப் பகிடியாகப் பேசுவார். வினோத் குடும்பத்தாரைப் போலவே இனிய சுபாவங்கள் உள்ளவர்.
ஒன்றரை மாதங்கள், விடுமுறை முடிந்து வினோத் வந்ததும் நாங்கள் தினமும் போவது நின்று விட்டது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் நாங்கள் 'walk'  போய்க் கொண்டிருக்கையில் பின்னால் யாரோ அழைப்பது கேட்கவே திரும்பினோம். பண்டார வியர்வை சொட்ட ஓடி வந்து "எங்கே போகிறிர்கள்? நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் 
வீட்டிற்கு வரலாமா?" என்று கேட்டார். "சரி" என்றதும் காரை அடுத்த தெருவில் நிறுத்தியிருக்கிறேன். பிறகு வருகிறேன் என்று போய் விட்டார்.
நாங்கள் நடையை முடித்து வீடு வந்து பத்து நிமிடங்களில் வந்தார். "நான் காருக்குப் போய் விட்டு உடனே வருவேன்." என்றவர் மீண்டும் வரும் போது பொலித்தீன் பைகளில் பொருட்களுடன் வந்தார். அவற்றை வைத்து விட்டு மீண்டும் போய் இன்னும் சில பொதிகளை எடுத்து வந்து வீட்டினுள் வைத்தார். "ஆன்டி, இவையெல்லாம் உங்களுக்குத்தான்." என்றார்.

பொருட்களைப் பார்த்து எங்களுக்கு ஒரே திகைப்பு. பால், பழங்கள், கீரைவகை, பலவித காய்கள் மட்டுமன்றி பாண், fozen chiken  என்று இரண்டு வாரங்களுக்குப் போதுமான பொருட்கள் இருந்தன. 
நான் கொடுத்த பட்டியலின்படி அன்று காலை தான் ஒருவாரத்திற்குப் 
போதுமான அத்தனை பொருட்களையும்  மகள் வீட்டார் கொண்டு 
வந்திருந்தார்கள். 
எதை எப்படி வைப்பது என்று கூறியவர், "நான் இப்போ வழிபாட்டுக்காகக் கோவிலுக்குப் போகிறேன்." என்று விடை பெற்றார்.
எல்லாவற்றையும் ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்டு வந்து உட்காரவும் தொலை பேசி அழைப்பு வரவும் சரியாக இருந்ந்தது.
எனது வியட்நாம் நண்பி, "நான் இப்போ அங்கு வருகிறேன்." என்றார். சற்று நேரத்தில் வந்தவர் கையில் பை நிறைய அப்பிள் பழங்கள். 

அன்று எங்களுக்குக் கிடைத்த அப்பிள் பழங்கள் மட்டுமே நாற்பத்தாறு. வீட்டில்  இருப்பதோ இரண்டே பேர்.
அன்று நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

I'm New

நேற்று சின்னப் பெண்கள் இருவரும் சுனாமி போல் வேகமாகப் பெரும் ஒலியுடன் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள்.

எதைக் கொட்டிக் குழப்பப் போகிறார்களோ என்று  நினைப்பதற்குள் மேசையில் இருந்த பொருட்கள்  நிலத்தில் சிதறி விட்டன. பலவிதமாக  சமாளிப்பதற்கு முயற்சித்தும் பலனில்லை. அவர்களின்  தாய்  வந்து "வாருங்கள், சிறுவர் பூங்கா போகலாம்,"  "party க்குப் போகலாம்" என்று என்னென்னவோ சொல்லிப்பார்த்தார். அவர்கள் நம்புவதாயில்லை.

நான் தொலைபேசியில் அவர்களின் தந்தையுடன் பேசுவது
போல்  "ஒ! நீங்கள் பார்க் போகிறீர்களா? சரி, நீங்கள் தனியே  போய் வாருங்கள்.  பிள்ளைகள் இங்கேயே நிற்கட்டும்," என்றேன்.

உடனே அனன்யா வீட்டிற்கு  ஓடினாள். ஓடிய வேகத்திலேயே திரும்பி விட்டாள். தன்னைத் தூக்கி மேசை மேல் இருக்க விடும் படி கேட்டாள். என் கணவர் அவளைத்  தூக்கி விட்டதும் பெரியவள் என்னிடம் தன்னையும் தூக்கி விடும் படி கேட்டாள்.
  நான், "என்னால் முடியாது. I'm old. I can't."  என்றேன். உடனே "But I'm new." என்ற பதில் வந்தது. தாய் சிரித்து விட்டு ஏதேதோ சொல்லி அழைத்தும் போக மறுத்து "Want a lolly, want a lolly" என்று பாட ஆரம்பித்தார்கள்.

வேறு வழியின்றி அதைக் கொடுக்கவும், தொடர்ந்து "Want a biscuit." என்று  பாடினார்கள். "வேறு என்ன தொடரப் போகிறதோ! இந்தப்
பாடல்  இலகுவில் முடியாது." என்று தாய் "வாருங்கள், கடைக்குப் போய் உடைகள், சப்பாத்துக்கள், toys எல்லாம்  வாங்கலாம்." என்று  சொல்லி அழைத்துப் போனார்.

இக்காலத்தில் குழந்தைகளைச் சமாளிக்கத் தனித்திறமை வேண்டும்

புதன், 4 ஆகஸ்ட், 2010

சுற்றிச் சுற்றி ..

"சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே" என்பது போல நானும் திரும்பத்  திரும்ப ஒரு சிறிய வட்டத்தினுள்ளே வளைய வந்து கொண்டிருக்கிறேன்.

ஆமாம் இந்த நாட்டில் எனது உலகம் மிகவும் சிறியதே. இந்த தொடர் மாடிக் குடியிருப்பிற்கு வந்ததிலிருந்து சில சம்பவங்கள், இங்கு குடி வருவோரெல்லாம் முதலில் எங்களை வினோதமான பிராணிகளைப் பார்ப்பது போல்  பார்த்தாலும் சில நாட்களில் நண்பர்களாகி விடுவார்கள். அதன் பின்னர் சில உதவிகளையும் கேட்பார்கள். முதலாவது கோடை விடுமுறையில்  ஒரு மாலைப் பொழுதில் அண்மையில் இருந்த மகன் வீட்டுக்குப் போய் விட்டுத் திரும்பினோம். கதவருகே ஒரு பொலித்தீன் பை வைக்கப்பட்டிருந்தது. உள்ளே பழங்களும் வேறு உணவுப் பொருட்களும் கூடவே ஒரு சிறு காகிதத்தில் சிறு செய்தி ஒன்றும் எழுதப்பட்டிருந்தது. "நாங்கள் இரு வார விடுமுறையில் போகிறோம். தயவு செய்து எங்கள் தபால்களை சேகரித்து வையுங்கள் எங்கள் 'rubbish bin' ஐயும் collection அன்று வெளியே வைத்து விடுங்கள்."

இது போன்று இங்குள்ளவர்கள் வெளியே செல்லும் சமயங்களில் எல்லாம் சிறு சிறு உதவி கேட்பார்கள். பதிலுக்குத் தாங்கள் என்ன கொண்டு வர வேண்டும் என்றும் கேட்பார்கள்.
எதுவும் வேண்டாம் என்றாலும்  நன்றிக்கடனாக ஏதாவது இனிப்புகள்
வந்து சேரும். அவற்றை  எங்கள் பக்கத்து வீட்டுச் செல்லப் பெண்கள் சுவைப்பார்கள்.

ஒருவர் தனது திறப்பை எங்களிடம் தந்து இது உங்களிடம் இருக்கட்டும். எப்போதாவது என்னிடம் உள்ளது தவறிப் போனால் உதவியாக இருக்கும் என்றார்.

இன்னுமொருவர் வெளியே செல்கையில் மடிக்கணணியைத் தந்து விட்டுப்போவார்.

எங்கள் யூனிட்டுக்கு மேலுள்ள யூனிட்டில் தாயும் மகளுமாக இரு  சீனப் பெண்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வெளியே போகும் போதெல்லாம் balcony  பக்கமுள்ள கதவைத் திறந்து வைத்து விட்டுப் போவார்கள். ஒரு நாள் அவர்கள் வந்து, "நாங்கள் திறப்பை உள்ளே வைத்துப் பூட்டி விட்டோம். ஏணி ஒன்று தர முடியுமா?" எனக் கேட்டார்கள். எங்களிடம் ஏணி இல்லை. "வேண்டுமானால் உயரமான stool  ஒன்று தருகிறோம்." என்று சொல்லிக் கொடுத்தோம். உயரம் போதாததால் ஒரு கதிரையின்  மேல் அதனை பின் விறாந்தையில் வைத்துவிட இளம் பெண் அதைப் பிடித்து நிற்கத் தாய் நீர் வடியும் குழாய் வழியே ஏறி மேலே போக முயன்றார். பல முறை முயன்றும்  முடியாது போகவே இருவரும் சீன மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள். சத்தங் கேட்டு வெளியே வந்த பக்கத்து யூனிட் பையன் மேலே ஏறித் திறப்பை எடுத்துக் கதவையும் திறந்து விட்டார்.

இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும் இதே போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட போது அவர்களில் ஒருவர் சமையல் அறையின் யன்னல் அருகே stool  ஐ வைத்து ஏறி யன்னலின் கண்ணாடிகளைக் கழற்றி விட்டு உள்ளே குதித்து எடுத்தார். பலனாக  காலில் பலமான அடியும் பட்டார்.

ஒன்பதாவது யூனிட் நண்பருக்கும் இதே போல் ஒரு முறை நடந்தது.

இவர், மற்றுமொரு நாள் அவசரமாக வந்து தனது செல்பேசி எண்ணைத் தந்து தனது அறைக்குப் போன பின் அழைத்தால் தவறுதலாக வைத்த போனைக் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லித் தன் அறைக்குத் திரும்பினார். எண்ணை டயல் பண்ணியதும் மணி ஒலித்தது. அவர் திரும்பி வந்து போன் கிடைக்கவில்லை என்றார். "உங்கள் காருக்கு அண்மையில் போய் நில்லுங்கள். இன்னுமொரு முறை முயற்சித்துப் பார்ப்போம்." என்றேன். திரும்ப மகிழ்ச்சியோடு வந்தார். 'காருக்குள் இல்லை. rubbish bin க்குள் இருந்து மணி அடித்தது." என்றார்.

இதன் முன்னரும் ஒரு மொபைல் போனை உடுப்புகளுடன் கழுவும் இயந்திரத்துள் போட்டு அதனைச் சித்திரவதை செய்த அனுபவமும் இவருக்கு உண்டு. அத்தோடு இவரும் ஒரு முறை திறப்பை உள்ளே வைத்து ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த அனுபவம் பெற்றவர்.

இப்படி எங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை  எல்லாம் எழுதினால் பதிவு நீண்டு விடும். எனவே விடை பெறுகிறேன்.

படத்தில் இருப்பது மாடிப் படிக்கட்டில் இருக்கும் அலங்காரம்.

சனி, 31 ஜூலை, 2010

Token

நாங்கள் இந்தத்   தொடர்மாடிக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

கடந்த ஐப்பசி மாத நடுப் பகுதியில் ஒரு நாள் துணி  கழுவுவற்கு ஆயத்தமாகப் போனேன். மொத்தக் கட்டிடத்துக்கும் பொதுவாக ஒரு அறை இதற்கென உண்டு.

அன்றுவரை உடுப்புக் கழுவும் இயந்திரத்திற்கு இரண்டு டொலர் நாணயம் உபயோகித்துக் கழுவி வந்தோம். அன்று நாணயம் செலுத்தும் பகுதி உடைக்கப் பட்டிருந்தது. வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன்.

அன்று மாலை இந்திய நண்பர் வந்ததும் அவரிடம் தெரிவித்தேன். அவர் வசிக்கும் யூனிட் அவருக்குச் சொந்தமானது. எனவே 'bodycorparate' க்கு அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் அந்த அறைக்குப் பூட்டுப் போடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் திறப்பும் வழங்கப் பட்டது. கதவுக்கு 'door push'  ஒன்றும் இணைத்திருந்தார்கள். அதனைத் திறப்பது கடினமாக இருந்ததால் பெண்கள் எல்லோரும் மிகச் சிரமப்பட்டோம்.  நாங்கள் தான் சிரமப்பட்டோம். மறு முறையும் கதவு உடைக்கப்பட்டுத் திருட்டுப் போய் விட்டது.

எனவே  நாணயத்திற்குப் பதிலாக 'டோக்கன்' பயன்படுத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

சில தினங்களின் பின் ஒருவர் டோக்கன்களைக் கொண்டு வந்து "இதனை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்," என்று என்னிடம் தந்து விட்டுப் போனார்.

அன்று மாலை அவற்றை இந்திய நண்பரிடம் ஒப்படைத்தேன். அவர் "ஆன்டி, இவை உங்களிடமே இருக்கட்டும்.  நாங்கள் வேலைக்குப் போவதால் பகலில் தேவைப் படுவோருக்குக்  கஷ்டமாக இருக்கும். நான் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்" என்றார்.

அன்று முதல் தேவையானவர்களுக்கு டோக்கன்களைக் கொடுத்துப் பணத்தைப் பெற்று வார இறுதியில் நண்பரிடம் ஒப்படைப்பேன். அவர் கணக்கை ஒரு நோட் புத்தகத்தில்  குறித்துக் கையொப்பம் இட்டுத் தருவார்.

இந்த வேலையினால் அன்றாடம் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 20 ஜூலை, 2010

பிறந்த நாள் பரிசு

வருகிற சனியன்று குட்டிப் பெண் அனிக்காவின் பிறந்தநாள்.

இவளது முதலாவது பிறந்தநாள் உணவகம் ஒன்றில் நன்றாகக் கொண்டாடப்பட்டது. அடுத்த வருடம் தங்கை அனன்யாவும் பிறந்து விட்டதோடு அவர்களது தாய் வழிப் பாட்டியும் இறந்து விட்டார். எனவே ஆரவாரமாகப் பிறந்தநாள் கொண்டாடுவது நின்று விட்டது. உறவினர் எல்லோருமே இந்தியாவில் வசிப்பதால் எங்களை மட்டுமே அழைத்து வீட்டில் கேக் வெட்டி இரவு உணவும் தருவார்கள்.
அனிக்காவிடம் "இம்முறை என்ன பிறந்தநாள் பரிசுகள் கிடைக்கும்?" என்று கேட்டேன்.

"அப்பாவிடம் அவரது கார் போலப் பெரிய கார் வாங்கித் தரும் படி கேட்டிருக்கிறேன். அம்மா எனக்கு நல்ல கமரா வாங்கித் தருவா" என்றாள்.

"சரி. நாங்கள் என்ன தரவேண்டும்?" என்று கேட்டேன். தயங்காமல் வந்த பதில் "அழகான பெரிய சாறி வேண்டும்."
அவளது பதிலைக் கேட்டதும் "நன்றாகப் பெரியவளாக வளர்ந்ததும் இவைகளை நீ கேட்காமலே நாங்கள் வாங்கித் தருவோம்." என்று தாய் சொன்னா.
இது அவர்கள் வீட்டு வாசலில் உள்ள பூஞ்செடி.

வெள்ளி, 16 ஜூலை, 2010

தேன் வியாபாரம்


அன்று பேச்சுப் பாட வேளையில், ஒவ்வொரு மாணவரிடமும் அவரவர் குடும்ப உறுப்பினர் எத்தனை பேர், தந்தை என்ன தொழில் செய்கிறார் மற்றும் சகோதரர்கள் பற்றிய விபரங்களைக் கூறும்படி கேட்டேன்.

அப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு மாணவர் தனது தந்தை முன்பு கடற்கரையில் கடலை வியாபாரம் செய்து வந்ததாகவும் வருமானம் போதாததால் தேன் வியாபாரம் செய்கிறார் என்பதாகவும் சொன்னார்.

'வியாபாரம் செய்வற்கான தேனை எப்படிப் பெறுகிறார்?' என்று கேட்டேன்.
சற்றும் தாமதிக்காமல் 'வீட்டிலேயே செய்வார்,' என்றார்.

'எப்படி செய்வார்?' என்று கேட்டேன்.
'சர்க்கரையை நன்றாகக் காய்ச்சி ஆறவிடுவார். பிறகு போத்தல்களில் ஊற்றி அதன் மேலாக சிறிது தேனை விட்டுப் போத்தலை மூடி விடுவார்,' என்று சொன்னார்.

வருமானம் இல்லாமையே சிலரை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

ஆனாலும், குழந்தைகள் ஒரு போதும் பொய் பேச மாட்டார்கள்.

புதன், 14 ஜூலை, 2010

Tea Bun


  
இவை ஒரு குட்டி மாணவரின் குறும்புத்தனங்கள்.

இந்த மாணவர்  பெயர் கோகுலன். முதலாம் ஆண்டு படித்தார். ஒரு நாள் பாடசாலை போனதும் கரும்பலகையை அழிப்பதற்கு duster ஐத் தேடினேன் காணவில்லை. மேசை துடைப்பதற்கென வைத்திருந்த துணியை எடுத்து உபயோகித்தேன்.

மாலையில் வீட்டில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். கோகுலனின் அக்காமார் இருவரும் வந்து படிப்பார்கள். அன்றும் அவர்கள் வந்தார்கள். படித்து முடிந்ததும் அழைத்துப் போக வருபவருக்காகக் காத்துக்கொண்டு நிற்கும் வேளை ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அவர்கள் வீட்டில் என்ன சமையல், யார் வந்தார்கள், என்ன நடந்தது என்று சொல்லிக் கொண்டிருந்த  போது, "டீச்சர், கோகுலன் இன்று வகுப்பு duster  ஐ வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து கழுவிக் கூரை மேல் காயப் போட்டிருக்கிறார்," என்றார்.   
 
"ஏன் அப்படிச் செய்தார்?" என்று கேட்டேன். "அதுவா! கெதியாக எங்கள் வீட்டில் குட்டிப் பாப்பா வரப் போகுது. அதற்குத் தலையணைக்குத்தான்," என்றார்கள்.
 
மறு நாள் பாடசாலையில் விசாரித்தேன். அது தனக்கு வேண்டும், தனக்கு வேண்டும் என்றார். இரண்டு வாரங்களின் பின் தம்பிப் பாப்பா பிறந்து விட்டார் என்ற செய்தியோடு வந்தார்.
 
"சரி, பாப்பாவிற்கு என்ன பெயர்?" என்று கேட்டேன். "டீ பன்" (தீபன்) என்றார். அன்று முதல் "தம்பி பெயர் என்ன?" என்பதும், அவர் "டீ பன்" என்பதும் சகஜமாகி விட்டது.
 
இன்னொரு நாள் இடைவேளையின் போது, ஒரு பெரிய வகுப்பு மாணவரை அழைத்து கன்டீனில் எனக்குத் தேனீர் வாங்கி வரும்படி அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் தேனீருடன் வடையும் கொண்டு வந்து நான் கொடுத்த பணத்தையும் திரும்பத் தந்தார். "கோகுலன் பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்குப் போய்த் தேனீரும் கூடவே சாப்பிடவும் ஏதாவதும் வாங்கி வரும்படி சொன்னார்," என்றார்.
 
இந்தக் கதையில் வரும் குழந்தைகள் நான்கு பேரும் பிற்பாடு நாட்டு நிலமை காரணமாகப் பெற்றோருடன் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

சனி, 10 ஜூலை, 2010

விருதுகள்

விருதுகள் வழங்கிய அன்பர்களுக்கு ,
விருதுகளை எனது பக்கத்திற்குக் கொண்டு வருவது எப்படிஎனத் தெரியாததால் தான் இத்தனை தாமதம். இதற்காக என்னை மன்னிக்கவும். 
க்ரௌன் விருது வழங்கிய ஸாதிகா,  தங்க மகன், தேவதை விருதுகளை வழங்கிய ஜெய்லானி மற்றும் செல்வி உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதோ,
உங்களுக்கு எங்கள் தோட்டத்து மாதுளங்கனிகள் - மாது உளம் கனிகள், இச்சொல் இரு பொருள் தரும் சொல். ஒரு சிலேடைச்சொல். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல் இவையும் மிகவும் சுவையானவையே. எடுத்துச் சுவையுங்கள்.
நன்றி.
அன்புடன்,
செபா.

திங்கள், 5 ஜூலை, 2010

எனது மூன்று நண்பிகள்

கடந்த வருடம் பங்குனி மாதத்தின் இறுதியில் ஓர் நாள் காலை மருத்துவப் பரிசோதனைக்குப் போவதற்காக எங்கள் 'drive way ''முடிவில் வாடகைக் காருக்குக் காத்துக் கொண்டு நாங்கள் நின்றோம்.

அவ்வழியே போன இளம் பெண்ணொருவர் திரும்பி வந்தார். "ஆன்டி, நீங்கள் இந்தியரா?" என்று கேட்டார். " இல்லை" என்றதும் "அப்போ நீங்கள் இலங்கையரா?" என்று கேட்டார்.

"ஆம். நாங்கள் இலங்கைத் தமிழர்," என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி.

உரையாடல் தமிழில் தொடர்ந்தது. எங்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டார். எங்கள் பக்கத்தில் உள்ள பாடசாலையில் அவர் மகள் படிப்பதாகவும் பெற்றார் ஆசிரியர் சந்திப்புக்காக தான் போவதாகவும் பின்னர் சந்திப்போம் என்று சொல்லிச் சென்றார்.

அன்று பின்னேரம் மூன்று மணிக்குப் பின் எங்கள் வீட்டுக்குத் தன் நண்பிகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். "நாங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் விட அல்லது அழைத்துப் போக வரும் போது அடிக்கடி உங்களை வந்து சந்திப்போம். உதவி ஏதும் தேவைப்பட்டால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்," என்று சொல்லித் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அதன் பின்னர் நேரம் கிடைக்கும் போது வந்து எங்களை அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போவார்கள். இவர்களது குழந்தைகளும் தாத்தா, பாட்டி என எங்களை அன்போடு அழைப்பார்கள்.

இந்த மூன்று பெண்களின் கணவர்களும் எம்முடன் மிக அன்பாக இருக்கிறார்கள். தெருவில் நாங்கள் நடந்து போவதைக் கண்டால் உடனே "காரில் ஏறுங்கள், கொண்டு போய் விடுகிறேன்," என்று அழைப்பார்கள்.

திங்கள், புதன் ஆகிய நாட்களில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கமலாவின் மூத்த மகளுக்கு சங்கீதப் பயிற்சி இருக்கும். அந்த நாட்களில் இளைய மகளுடன் இங்கு வந்து விடுவா. எனக்கு மரக்கறிகள் வெட்டுவது போன்ற சமையலுக்கான உதவிகளைச் செய்த பின் மகளைப் பாடசாலையில் விட்டு விட்டுப் போவா.

மருத்துவப் பரிசோதனைக்கு அல்லது இரத்தப் பரிசோதனைக்குப் போக வேண்டியிருந்தால் வந்து அழைத்துச் செல்வார்கள். வீட்டில் விஷேட உணவுகள் தயாரிக்கும் போதும் எங்களுக்கும் கொண்டுவரத் தவறுவதில்லை.

கமலா, மீனா, கௌதமியுடன் அவர்கள் வீட்டிற்கு வந்து போகும் அவர்களது நண்பிகளும் எங்களோடு அன்பாகப் பழகுவது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவும் தனிமையைக் குறைப்பதாகவும் உள்ளது.

இவர்களை நண்பர்களாகப் பெற்றது பெரிய அதிர்ஷ்டமே.

புதன், 23 ஜூன், 2010

ஒரு வித்தியாசமான அனுபவம்

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை குட்டிப்பெண்கள் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் கதவருகில் நின்றிருந்த ஒன்பதாம் யூனிட் நண்பர் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த எனக்குப்
பெரிய அதிர்ச்சி. எங்கள் சமையலறை மேசையில் முழு ஆடு (உரித்ததுதான்) கிடத்தப்பட்டு மேசை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

பக்கத்தில் எனது கணவர் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார். "என்ன நடந்தது?" என்று கேட்டேன். "ஆட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். 'ஆம்,' என்றதும் இதைக்கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போகிறார்," என்றார்.

"என்ன செய்வது? யாரிதை வெட்டுவது அப்படியே rabish bin இல் போட்டு விடுவோமா?" என்று கேட்டார். அப்படிப் போடுவதானாலும் துண்டுகளாக வெட்டித்தான் போட வேண்டும் "நீங்கள் இப்போ போய் நண்பர் சந்தோஷை அழைத்து வாருங்கள் பின் என்ன செய்வதென்று யோசிப்போம்," என்றேன்.

என் கணவர் என்ன சொன்னாரோ சந்தோஷும் (இவர்தான் பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண்களின் தந்தை.) தன்னிடமிருந்த பெரிய கத்தியுடன் வந்தார். அது மரக்கறி வெட்டத்தான் உபயோகப்படும். வந்து ஆட்டைப் பார்த்துவிட்டு, "ஓ! அங்கிள் இதனால் வெட்ட முடியாது," என்று சொல்ல என்னிடமிருந்த ஓரளவு பெரிய கத்தி ஒன்றைக் கொடுத்தேன்.

"இன்று நீங்கள் என்னை ஒரு butcher ஆக்கி விட்டீர்கள்," என்று சிரித்தவாறே வெட்டத் தொடங்கினார். உதவியாளராக நான். ஐந்தேகால் மணிக்குத் தொடங்கிய வேலை அரை மணி நேரத்தில் முடிந்ததது.

அவரிடம் "உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை இந்தப் பொலிதீன் பைகளில் போட்டு விடுகிறீர்களா?" என்று கேட்டேன். எல்லா வேலைகளும் முடிந்ததும் இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு போய் இரண்டு நண்பர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வந்தார். மற்றவைகளை மறுநாள் வேறு மூன்று நண்பர்கள் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள். அன்று அந்த மேசையைச் சுத்தம் செய்யும் வேலையும் என்னுடையதாயிற்று.

அடுத்த தடவை அந்த நண்பரைச் சந்தித்த போது எங்களுக்கு இனிமேலும் இப்படி வேலை தராதீர்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டோம்.

மேலே இருப்பது என் பேரன் பாடசாலையில் படித்த காலத்தில் செய்த ஒரு ப்ரொஜெக்ட்.

செவ்வாய், 15 ஜூன், 2010

அப்பா செய்த மேடை

வீட்டிலிருக்கும்போது நான் ஏதாவது வேலைகள் இருந்தால் மகனைத் தொட்டிலில் படுக்கவைத்து விட்டுச் செய்வேன். அவர் எழுந்துவிட்டால் இமா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுவா. சில வேளைகளில் பாட்டைக் கேட்டுக் கொண்டு மகன் திரும்ப நித்திரையாகி விடுவதுமுண்டு.

ஐந்து வயதானதும் நான் கடமையாற்றிய பாடசாலையிலேயே இமாவைச் சேர்த்தோம். அது பெண்கள் பாடசாலை. ஆனாலும் முதலாம், இரண்டாம் வகுப்புகளில் ஆண் குழந்தைகளும் படித்தார்கள். அங்கும் எனக்கு முதல் வகுப்புத்தான் (ஆண்கள் பிரிவு) கிடைத்தது.

பாடசாலையில் நடைபெற இருந்த நிகழ்வொன்றில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஏதாவது பாடல், நடனம் அல்லது நாடகம் கொடுக்க வேண்டுமென அதிபர் உத்தரவிட்டார். இரண்டு வகுப்பு மாணவர்களையும் சேர்த்து சக ஆசிரியரும் நானும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய பாடல் பழக்கினோம். உடைகள் சிறகுகள் எல்லாம் அழகாகத் தயாரித்தோம்.

குறிப்பிட்ட தினத்தன்று ஒத்திகை பார்க்க மேடைக்கு அழைத்துச் சென்ற போது இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. என்னசெய்வதென நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அதிபர் "இமா, இது உங்கள் அப்பா செய்த மேடைதான். உடையவே உடையாது," என்று சொல்லிச் சமாளித்தார். பின்னர் யாவும் ஒழுங்காக நடந்தன.

பின்னேரம் அப்பா வீடு வந்ததும், "நீங்கள் செய்த மேடையில் ஏறி நான் பாட்டுப் பாடினேன் அப்பா," என்றா.

ஞாயிறு, 23 மே, 2010

இமா குழந்தையாக


இமா குழந்தையாக இருந்த போது சமையல் செய்தாலும் உடைகள் தோய்க்கும் போதும் pram இல் இருக்க வைத்து ஏதாவது குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் சொல்லிக் கொடுப்பேன். அவவும் முடிந்தவரை திருப்பிச் சொல்லுவா. ஒன்றரை வயதிலேயே கதைக்க ஆரம்பித்து விட்டா. பாடசாலை போகையில் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுப் போவேன்.

அடுத்த குழந்தையும் கிடைக்க இருந்ததால் இடம் போதாமையால் வேறு வீடு மாற வேண்டி ஏற்பட்டது. அங்கும் ஒரு வயதான தம்பதியர் பெருமளவு உதவியாக இருந்தனர். இமாவுக்கு இரண்டு வயது நிறைவுற்றுச் சில நாட்களில் மகன் பிறந்தார்.

ஒரு மாத காலம் நான் வீட்டில் நின்றேன். பிரசவ விடுப்பு முடிந்து பாடசாலை திரும்புவதற்கு முன்னர் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை ஒழுங்கு செய்தோம். காலை ஆறரை மணி முதல் மாலை ஆறு மணி வரை தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வார். வயதான பறங்கிப் பெண் என்பதால் 'மம்மா ' என்று அழைப்போம். பிள்ளைகள் இருவரையும் மிக அன்பாகப் பராமரித்ததால் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் பாடசாலையிலிருந்து வந்ததும் மம்மா தேனீரைத் தந்த பின் "உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் தம்பியும் (அப்படித்தான் என் கணவரை அழைப்பார்,) வரட்டும்" என்றார்.

இவர் வந்ததும் "தம்பி, தங்கச்சி, நான் வேறு வேலைக்குப் போகப் போகிறேன். இமா எனக்கு நல்ல ஐடியா ஒன்று சொல்லி இருக்கிறா.' என்றா. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைச் சொன்னா.

"மம்மா உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?"

"கிழமைக்கு இருபது ரூபா "

"அவ்வளவு தானா? இது உங்களுக்குப் போதுமா?"

"போதாதுதான், என்ன செய்கிறது?"

"நீங்கள் ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும்? வேறு வேலைக்குப் போகலாமே?"

"எங்கே போவது? எனக்கு யார் வேலை தருவார்கள்?"

"நீங்கள் port cargo வில் (துறைமுக அதிகாரசபையில்) வேலைக்குப் போனால் நிறையச் சம்பளம் தருவார்கள்."

"ஓ! அப்படியா, எவ்வளவு கிடைக்கும்?"

"ஒரு நாளுக்கு நூறு ரூபா கிடைக்கும்."

"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

"நான் பார்ப்பேன்."

இப்படியே நீண்ட உரையாடல் நடக்குமாம். பின்னரும் பல முறை மம்மா சொல்லி சிரிப்பா.

சனி, 22 மே, 2010

அனுதாபங்கள்

மங்களூர் விமான விபத்தில் சிக்கிய அனைவர் குடும்பக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செபா

சனி, 8 மே, 2010

இது இன்னொரு மாணவர் பற்றிய நினைவுகள்

சுஜன்
முதல் நாள் பாடசாலைக்கு வந்த போது ஏனைய மாணவர்களைப்போல் அழவில்லை ஆயினும் முகத்தில் மகிழ்ச்சியில்லை. என் அருகிலேயே நின்றார். சிறிது நேரம் கழிந்ததும் "நான் வீட்டுக்குப் போக வேண்டும். போனில் அப்பாவை அழையுங்கள்." என்றார். "நீங்கள் போய் இடத்தில் இருங்கள். சிறிது நேரத்தில் வெளியே போய் விளையாடலாம்." என்றேன். அவர் அசைவதாயில்லை. தொடர்ந்து வந்த நாட்களிலும் தனது நாற்காலியை என் பக்கமாகப்போட்டுக்கொண்டிருந்து விட்டார்.

அடுத்த
வாரத்தின் முதல்நாள், பாடசாலை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடை பெற்றது. சுஜன் திடீரென ஆசிரியர்களின் அறைக்குள் நுழைந்து எனக்குப் பக்கத்தில் நின்று விட்டார். மெதுவாக அவரை வெளியே அழைத்துப் போய் வகுப்பில் இருக்கும்படி சொல்லி விட்டு வந்திருந்தேன். சற்று நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் திரும்பிப் பார்க்கவே நானும் திரும்பினேன். இவர் என் பின்னே யன்னல் அருகில் வெளியே நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்துப் பல முறை சொன்னபின் ஒருவாறு முதல் வரியில் அமரத் தொடங்கினார். அதுவும் பாடசாலை முடிந்ததும் வீட்டிலிருந்து யாரேனும் வருகிற வரை நான் அவரோடு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடுதான்.

இரண்டு
மாதங்கள் கடந்து விட்டன. அன்று எனது மகனுக்குக் கடுமையான காய்ச்சல். மருந்தைக்கொடுத்து விட்டுத் தேவையானவைகள் யாவும் எடுத்து வைத்து விட்டுப் பாடசாலை போனேன். மதிய இடைவேளையின் போது இவரை அதிபரின் அறையின் முன் இருக்க விட்டு அவசரமாக வீட்டுக்குப் போனேன். எங்கள் தெருவை அண்மித்ததும் பின்னால் யாரோ தொடர்வது தெரிந்து திரும்பினால், சுஜன் நிற்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு அழைத்துப் போனேன். காய்ச்சலோடு இருந்த மகன்தான் சைக்கிளில் கொண்டு போய் விட்டார். திரும்ப வந்தவுடன் அவரைக் கவனித்து விட்டு அவசரமாகப் பாடசாலை திரும்பினேன்.

நான்கு
மாதங்கள் கடந்த பின் ஒரு சனிக்கிழமை அவருடைய சித்தப்பா வந்து எங்களை அவர்கள் வீட்டுக்கு மதிய உணவுக்கு மறுக்காமல் வரும்படி அழைத்தார். சம்மதமானால் தானே வந்து அழைத்துப் போவேன் என்றார். அங்கு போனதும்தான் அவர் இப்படி இருப்பதற்கான காரணம் புரிந்தது. வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, அத்தைமார்களோடு ஒரு தம்பியும் தங்கையும் இருந்தார்கள். சிறியவர்கள் இருந்தும் இவர் வீட்டில் செல்லப்பிள்ளை. இவர் சொல்வதெல்லாமே அங்கு நடக்கும்.

அது
முதல் அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்து கொள்வோம். கிட்டத்தட்ட நெருங்கிய உறவுகள் போலாகி விட்டோம்.

இப்போ திருமணம் செய்து தந்தையாகக் காத்திருக்கிறார் இவர். அவர்கள் இன்றும் எங்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விடயம்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

எதிர்பாராத முத்தம்

முதல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் படித்தபோது கிடைத்தது இது.
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும்.
ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான்.
மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன்.
எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர்.
மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார்.
நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

அத்தான்

ஆசிரியையாய் என் அனுபவங்கள்
அத்தான்

பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.

ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.

சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.

மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.

வியாழன், 22 ஏப்ரல், 2010

வியட்நாம் நண்பி அளித்த விருந்து

வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

வியாழன், 25 மார்ச், 2010

ஒரு ப்ளட் டெஸ்ட்டும் பஸ் பயணமும்

ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி இன்று காலை பேரன் வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்காக 'lab' இற்கு அழைத்துப்போனார். உள்ளே பதினான்கு பேர் அமர்ந்திருந்ததைக் கண்டதும் இன்று மதியம் தான் 'காலை உணவு சாப்பிடலாம்' என்று நினைத்தேன். நேற்று இரவு உணவு எட்டு மணிக்குச்சாப்பிட்டது என்று யோசித்தபடி உட்கார்ந்தோம். ஐந்தாவது நிமிடமே என்னை அழைத்தும் ஆச்சரியத்தோடு எழுந்து சென்றேன். வெளியே வருகையில் கணவர் மறு அறைக்குள் போயிருந்தார்.

பதினைத்து நிமிடங்களில் முடிந்துவிட வீடு வந்து சேர்ந்தோம்.

காலையுணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கவும் போனில் அழைப்பு வரவும் சரியாயிருந்தது. போனில் குட்டிப்பெண் அனான்யா "கிராண்ட்மா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வாருங்கள்." என்றார். மறுக்க முடியவில்லை. புறப்பட்டோம். வழி எல்லாம் ஒரே கும்மாளம். "bus" இல் ஏறினவுடன் 'எங்கே பெல்ட்?' என்று கேட்டார்கள்.

கோவிலில் வழிபாடு முடிந்ததும் அண்மையில் இருந்த எங்கள் நண்பர்களின் விடுகளுக்கும சென்று,

வீட்டுக்குத் திரும்பிய போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

புதன், 10 மார்ச், 2010

பக்கத்து யுனிட் குட்டிப்பெண்கள் பாகம் - 2

இன்று காலை நடக்கப் போவதற்காக (walk) நாங்கள் எங்கள் 'ட்றைவ்வே'யைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த போது பின்னால் "க்ரான்ட்மா, க்ரான்ட்பா" என்று சத்தமிட்டபடி குட்டிப் பெண்கள் ஓடி வந்தார்கள். எங்களுடன் வரவேண்டுமென்று அடம் பிடிக்கவும் அவர்களது தாயும் வரவே எல்லோரும் நடையைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

"எங்கே போய் வருகிறீர்கள்?" இது நான்.
"சிங்கிள் பார்க்கிற்கு." இது பெரிய பெண்.
"வேறு என்ன பார்க்கிற்குப் போவீர்கள்?"
"சிறிய பார்க்கிற்கும், பெரிய பார்க்கிற்கும் போவோம்."
"ஓ! அப்படியா? பெரிய பார்க் எங்கே இருக்கிறது?"
"அது மிகத் தூரத்தில் இருக்கிறது. அப்பா எங்களைக் கூட்டிப் போவார். சீசோ, ஊஞ்சல்கள், ஸ்லைடர்கள், இன்னும் பல விளையாட்டுக்கள் அங்கே விளையாடலாம். மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை," என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள்.

எனக்குப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


சில மாதங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை, செவ்வாயும் புதனும் அவர்களின் தாய்க்கு விடுமுறை. எனவே குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரும் பரபரப்பாக இருந்தது. தாய் உடைகளைக் கழுவுவதற்காகச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு வந்து பார்த்திருக்கிறார். காற்றுக்குக் கதவு பூட்டுப்பட்டு விட்டது. பிள்ளைகள் உள்ளே. சாவியும் உள்ளே. மறுபுறம் முழுவதும் கண்ணாடிச் சுவர். அந்தப் பக்கம் சென்று பெரியவளைக் கதவைத் திறக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவளுக்கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பிறகு, எங்கள் போனில் அவர்கள் தந்தையை அழைத்துச் சொல்ல அவர் வந்து திறந்து விட்டார். பெரியவள் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் "க்ரான்ட்மா! எனது நகங்களுக்குப் பொளிஷ் போட்டதால் தான் என்னால் திறக்க முடியவில்லை" என்றாள். ஆனால் இப்போது கதவைத் திறக்கும் அளவு வளர்ந்து விட்டாள்

புதன், 27 ஜனவரி, 2010

பக்கத்து யூனிற் குட்டிப் பெண்கள்.

அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மூன்றரை, இரண்டரை வயதினர். அவர்களது பெற்றோர் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த யூனிட்டை வாங்கி இதில் குடி வந்தனர். இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்கள். வந்த நான்கு மாதங்களில் முதற்குழந்தை பிறந்தாள். அடுத்த வருடத்திலே இரண்டாவது பெண் பிறந்தாள். இருவருமே படு சுட்டிகள். முதலில் அவர்கள் பழகத் தொடங்கியது எங்களோடு தான். முதலில் 'aunty, uncle' என்று அழைத்தவர்கள் இப்போ 'gandma, grandpa' என்று அழைக்கிறார்கள். ஏதும் காரியம் ஆக வேண்டுமானால் 'grandmaji please ' என்று ஐஸ் வைக்கத் தொடங்கி விடுவார்கள். என்னால் ஆகவில்லை என்றால் க்ராண்ட்பாவிடம் போய் விடுவார்கள்.

இவர்களது வால் தனங்கள் எண்ணிலடங்காது. சுனாமி போல் திடீரென நுழைந்து வீட்டை அதகளப்படுத்தி விடுவார்கள். பார்க் போகும் போது வழியில் கதவைத் தட்டி 'We'll see you both in the park' என்று கூறிவிட்டு ஓடி விடுவார்கள்.

உலகிலேயே அருமையான பிள்ளைகளாக மிக அன்பாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள். நடுவில் சண்டை வந்து விடும். அடித்துப் பிடித்து, முடியை இழுத்து சமயங்களில் ஒருவரையொருவர் கடித்தும் சண்டை தொடரும். 'இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கிறது' என்று சொல்லி அவர்களின் தாய் பிணக்கைத் தீர்க்கப் பெரும் பாடு படுவார். இவர்களைப்பற்றி இன்னும் வரும்

சனி, 23 ஜனவரி, 2010

எங்கள் அப்பார்ட்மென்ட் -1இன்று நான் சமைத்துக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. திறந்த எனக்கு ஆச்சரியம். எங்கள் பக்கத்து யூனிட்டில் வசித்து ஒன்றரை வருடங்களுக்கு முன் வீடு மாறிச் சென்ற நண்பியைக் கண்டதும் ஒரே மகிழ்ச்சி. இங்கு வசிக்கும் போதே விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். சிம்பாப்வே நாட்டவராக இருந்தும் இன்று வரை எங்களை நினைவில் வைத்திருப்பது பெரிய விடயம் தான். உடனே எனக்கு எங்கள் அப்பார்ட்மென்ட் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது.

இங்கு நாங்கள் ஐந்து ஆண்டுகளாக வசிக்கிறோம். பன்னிரண்டு யூனிட்டுகள் உண்டு. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். ஆறு நாட்களில் வீடு விட்டுப் போனவர்களும் மிகச்சில மாதங்களில் விட்டுபோனவர்களும் அநேகர்.

எங்கள் அப்பார்ட்மென்ட் -2

நேற்று walk போய் வரும் போது ஒரு கார் எங்களருகில் வந்து நின்றது. "ஹாய் இது என் தாயார். கொரியாவிலிருந்து வந்துள்ளார்," என்று அறிமுகம் செய்து வைத்தார். "நாங்கள் சில நாட்களில் நாட்டுக்குத் திரும்புகிறோம்," என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் இவரது உறவினர் ஒருவர் பற்றியும் குறிப்பிடவேண்டும். சென்ற வருடம் இங்கிருந்து போன பின்னரும் அடிக்கடி எங்களோடு தொலை பேசியில் பேசுவார். ஆங்கிலம் நன்றாகப் பேச முடியாவினும் எப்படியாவது தான் நினைப்பவற்றை விளங்கப்படுத்தி விடுவார்.


இவர்களைப் போல் இன்னும் பலர் நினைவில் உள்ளனர் . அவர்களைப் பற்றிப் பின்னர் எழுதுவேன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

வலைப்பூ அறிமுகம்


பொழுது போக்கிற்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வலைப்பூ ஒன்றை உருவாக்கும் எண்ணம் உருவானது.

என் இதயத்திலிருந்து எல்லாமே இங்கு பதிவாகப் போகிறது.

நேரம் கிடைக்கும் போது இந்தப் பக்கம் வாருங்கள்.
படித்து விட்டு உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.

நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.