சனி, 23 ஜூலை, 2011

ஒரு தோழியும் ஒரு ரயில்ப்பயணமும்

முதலில் வருகை தருவோருக்கு வணக்கம். நீண்ட  நாட்களின் பின் ஒரு சிறு பதிவு போடலாம் என்று இந்தப் பக்கம் வந்தேன்.
கணணி முரண்டு பிடித்து விட்டதே தாமதத்திற்குக்  காரணம்.

நாங்கள் செய்த ஒரு சிறு  ரயில் பயணம் பற்றியது இப்பதிவு. நியூஸிலாந்தில் இது தான் எங்கள் முதல் ரயில்பயணம். 

எனது நண்பி ஒருவர், "வாருங்கள், நாங்கள் ஒருநாள் ரயிலிலும், ஒரு தடவை ferry  இலும் போய் வருவோம். உங்களை நான்
பக்குவமாக அழைத்துச் சென்று கொண்டு வந்து விடுவேன்,"
என்று அழைப்பதும் நாங்கள் மறுப்பதுமாக ஒரு வருடம்
ஓடி விட்டது.

சென்ற புதன் கிழமை, "நாளை போவோம்," என்றார்.
வழக்கம் போல் "காலநிலை நன்றாயில்லை; பின்னர் பார்ப்போம்,"
என்றேன்.

மறு நாள் காலை எங்கள் வீட்டிற்கு வந்தே விட்டார்.
மறுக்க முடியாமல் நாங்கள் புறப்பட்டோம். மழை கொட்டிக்
கொண்டிருந்தது.

நாங்கள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள பஸ் தரிப்பிடம் போகவும் பஸ் வரவும் சரியாயிருந்தது. வண்டியில் ஏறி இருந்ததும், "எங்களுக்கு இந்தப்பாதை பழக்கமில்லை ஆதலால் எங்கு இறங்க வேண்டும் என்பதைக்  கவனித்துக் கொள்ளுங்கள்," என்றேன். குறித்த இடம் வந்ததும் இறங்கி, குடையை ஒரு கையிலும் என்னை மறு கையிலும் பிடித்த படி என் கணவரிடம் "மெதுவே பார்த்து வாருங்கள்," என்றார்.
 புகையிரத நிலையத்தில் வண்டி புறப்படத் தயாராக நின்றது. பயணிகள் ஏறியதும் நடத்துனர் பிளாட்போர்மில் யாரும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டு கதவைப் பூட்டி சிக்னல் கொடுக்க வண்டி நகர்ந்தது.
 
அசைவது தெரியவேயில்லை. பயணிகள் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு.
அடுத்த  நிறுத்தத்தின் பெயர், எங்கே தரித்து நிற்கிறது என்பதெல்லாம் எதிரில் இருந்த கதவின் மேல் மாறி மாறி எழுத்தாய் ஓடிக்கொண்டிருந்தது.

பத்து நிறுத்தங்களின் பின் நாம் இறங்கினோம்.
 
சிறிது தூரத்தில் இருந்த நண்பி வீட்டுக்குப் போனோம். மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாய்ப் பயணம் தொடங்கிற்று. மாலை மூன்று மணியளவில் புறப்பட்டு புகைவண்டி நிலையம் வந்து திரும்பவும் பஸ்சில் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.

  
தரிப்பிடம் வரும்வரை அடிக்கடி "பக்குவமாகப் போவீர்களா?' என்று கேட்டபடி வந்த தோழி, தான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தில் இறங்காது எங்கள் வீட்டிற்கு  அருகாமையில் இறங்கி வீடு வரை வந்து விட்டுப்போனார்.
 
"இப்படி ஏன் செய்கிறீர்கள்?" என்று கேட்க, "உங்களை மழை நாளில் அழைத்ததால் கவனமாகக் கொண்டு வந்து விட்டேன்," என்றார்.