திங்கள், 3 ஜூலை, 2017

மேசையிலிருந்து ஒரு மேசை


இது சென்ற வருடம் வீட்டிலிருந்த போது எடுத்து வைத்த படம்.


என் கணவர், உடைந்து போன மேசை ஒன்றிலிருந்து கிடைத்த பலகைகளைக்  கொண்டு இந்த  சிறிய மேசையைச் செய்தார்.

நியூசிலாந்து  வந்தபின் ஒழுங்கான கம்மாலை என்று இருக்கவில்லை. எங்களுக்கென மோட்டார்வண்டி இல்லை. அதனால் வெறுமனே இருக்கும் கார் தரிப்பிடத்தைத் தனது கம்மாலையாகப் பயன்படுத்தினார். எப்பொழுதும் எதையாவது தட்டிக்கொண்டே இருப்பார்.

வியாழன், 1 ஜூன், 2017

பொழுதுபோக்கு


என் அறையின் வெளியே கோழிக்கூடு ஒன்று இருக்கிறது - பறவைகள் தங்குவதற்கு மட்டும் அளவான அந்தச்  சிறிய கூட்டைச் சுற்றி ஒரு கம்பிவலை வேலி. 

ஜன்னல் வழியே தெரியும் கோழிகளில் ஒன்றைப் பார்த்து வரைந்திருக்கிறேன். முன்பு போல என்  விரல்கள் உறுதியாக இல்லை.

தினமும் படத்தில் சில வரிகள் கூடிக் கொண்டு வரும். பொழுது போக வேண்டுமே!

ஒரு கிறுக்கல்.
இன்னும் ஒன்று.
ஓரங்களை சாதாரண கத்தரிக்கோல் கொண்டு அலங்காரமாக வெட்ட முயற்சித்தேன்.

வர்ணம் தீட்ட முன்பே தாதி ஒருவர் கேட்டு வாங்கிப் போய் விட்டார். செய்யும் வேலை மற்றவர்களிடமிருந்து பாராட்டுப் பெறும் போது சந்தோஷமாக இருக்கிறது.

புதன், 24 மே, 2017

மீண்டு(ம்) வந்தேன்

இன்று முதல்...

      'இதயத்திலிருந்து' வார்த்தையாக வெளிவருபவை இமாவின் விரல் வழியே இங்கு பதிவாகும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்...றோம்.


இப்படிக்கு...

செபா & இமா 


@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->---


வெகுநாட்கள் கழித்து - ஆறு வருடங்கள் கழித்து வந்திருக்கிறேன். முதலில்                                                                           வணக்கம். _()_


என்னைப்பற்றி அன்போடு விசாரிக்கும் நட்புகளுக்காக ஒரு செய்தி. நான் நன்றாக இருக்கிறேன்.

இப்பொழுது ஓர் ஓய்வு இல்லத்தில் இருக்கிறேன். இது முதியோர் இல்லம் அல்ல; ஒய்வு இல்லமேதான்.

இங்கு என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்; எனக்கு வேண்டிய எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. தினமும் என் அறையைச் சுத்தம் செய்கிறார்கள். படுக்கையைத் தட்டிப் போடுகிறார்கள்,  குளிக்க வைக்கிறார்கள், உடை மாற்றிவிடுகிறார்கள், தேவைப்படும் போது உணவைச் சின்னதாக வெட்டியும் கொடுக்கிறார்கள். முழு நேர மருத்துவ கண்காணிப்போடு வாழ்க்கை போகிறது. சந்தோஷமாக இருக்கிறேன்.

புதன், 24 ஆகஸ்ட், 2011

அனிக்கா பாடசாலை போகிறாள்

ஐந்தாவது பிறந்த நாள் முடிந்து அனிக்கா பாடசாலை போவதற்கு ஆயத்தமாகிவிட்டாள். 
 
ஏற்கனவே மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாள் 'school visit' என்று ஒரு மணித்தியாலம் பயிற்சி கொடுக்கப்பட்டது.
 
முதல் இரண்டு வாரங்கள் இரண்டு மணிக்குப் பாடசாலை முடிவதால்
அந்த இரண்டு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அனிக்காவை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார். ஆசிரியருக்கு எங்களை அறிமுகப்படுத்துவதற்காக  முதல் நாள்  போகையில் எங்களையும் அழைத்துப் போவதாகச் சொன்னார்.
முதல் நாள்  காலை எட்டரை மணிக்கு நாங்கள் தயாராக இருந்தோம். குழந்தைகள் வந்து அழைத்தார்கள். காரில் ஏறியதும் பக்திப்பாடல் ஹிந்தியில் ஒலிபரப்பவும் இருவரும் இணைந்து அழகாகப் பாடினார்கள்.
 
மூன்றே நிமிடத்தில் பாடசாலை வந்தது. உள்ளே போனதும் ஆசிரியையிடம், "இவர்கள் எனது க்ராண்ட்மாவும் க்ராண்ட்பாவும். இவர்கள்தான் இன்று என்னை அழைத்துப் போவார்கள்," என்று அனிக்கா சந்தோஷை முந்திக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்தினார். புத்தகப்பையிலிருந்து தேவையானவற்றை எடுத்தபின் புத்தகப்பையை கொழுவுவதற்கு வகுப்பிற்கு வெளியே பெயர்களோடு இடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. கொழுவ வேண்டிய இடத்தில்
கொழுவி விட்டு அனிக்காவை உள்ளே அழைத்து சென்றார் ஆசிரியை.
நாங்கள்  வீட்டுக்கு வந்தோம்.
 
பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக பாடசாலைக்குப் போனோம். பிள்ளைகள் எல்லோரும் வெளியே அமர்ந்திருந்தார்கள். அனிக்கா ஆசிரியையிடம் நாங்கள் வந்துவிட்டதை அறிவிக்க அவர் வெளியே வந்து புத்தகப்பையில் எல்லாவற்றையும் வைக்கச் செய்து எங்களுடன் அனுப்பி வைத்தார். 

அனிக்காவும் சந்தோஷும் எங்களுடன் பழகிய விதம் அவருக்கு நாங்கள் அவளது குடும்ப உறவினர் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அவரது "You are lucky to have your grandparents  here,"  என்ற வார்த்தைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. 
 
அனிக்கா மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தாள். கதவைத் திறந்ததும் புத்தகப்பையை அதன் இடத்தில் கொழுவிவிட்டு; சப்பாத்தைக் கழற்றி அதனிடத்தில் வைத்து விட்டு அறைக்குள் மறைந்து விட்டாள். சிறிது நேரத்தில் உடை மாற்றி வெளியே வந்து, "கிராண்ட்மா எனக்கு இந்த உடைகளைக் கொழுவ உதவி செய்யுங்கள்," என்று கேட்டு அதையும் கொழுவிவிட்டு புத்தகப்பையைத் திறந்து செய்த வேலைகள் எல்லாவற்றையும் காட்டினாள். பின் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து சுத்தமாகக் கழுவித் துடைத்து வைத்தாள். மேசையில் இருந்த பிஸ்கட் இரண்டை எடுத்துச் சாப்பிட்டபின் தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
 
அனிக்கா வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த விதம் எங்களை வியப்படையச் செய்தது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அனிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள்

கடந்த இருபத்து நாலாம் தேதி அனிக்காவிற்கு ஐந்தாவது பிறந்த நாள்.
'Gate Way' என்னும் உணவகத்தில் 'party ' ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அனிக்கா  அழைக்கத் தொடங்கி 
விட்டாள்.

பிறந்த நாள் அன்று காலை வாழ்த்தலாம் எனத் தொலை பேசியில் அழைத்தேன். அனன்யாவின் குரல் கேட்டது, "கிராண்ட்மா நமஸ்தே!
இன்று அனிக்காவின் ஐந்தாவது பிறந்த நாள்." "ஆம், அனிக்காவிடம்
ரிசீவரைக் கொடுங்கள்." என்றேன்.

அனிக்கா வாங்கியதும் வாழ்த்தினேன். "நன்றி, நீங்கள் இன்று மாலை வரவேண்டும்." என்றாள். "எங்களிடம் கார் இல்லையே! நாங்கள் எப்படி வருவது? ஒரு காரில் ஆறு பேர் போக முடியாதல்லவா?" என்றேன்.

"எங்கள் காரில் ஏழு பேர் போகலாம். பப்பாவும் க்ராண்ட்பாவும் முன்னால் இருக்க நீங்கள் எனக்கும் அனன்யாவிற்கும் நடுவிலும் மம்மா பின்னாலும் உட்காரலாம்." என்றாள்.
மாலை நாலு மணிக்கு சந்தோஷ் கேக் பெட்டியைக்  கொண்டு வந்து
எங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து  விட்டு, "ஆறு மணிக்கு
தயாராயிருங்கள் போகலாம்." என்றார்.
ஆறு மணிக்கு வந்தவர் "ஆன்டி, இப்போ அங்கிள் என்னோடு வரட்டும்,
நீங்கள் எங்கள் வீட்டில் இருங்கள். நான் திரும்ப வந்து உங்கள்
எல்லோரையும் அழைத்துப் போகிறேன்." என்று சொல்லி கேக்
 பெட்டியையும் எடுத்துப் போனார்.

நான் அவர்கள் வீட்டில் போய் இருந்தேன். அனிக்கா அருகில் வந்து, "கிராண்ட்மா, அங்கு எங்கள் ஆசிரியர்களும், மம்மா பப்பாவின் நண்பர்களும் வருவார்கள்." என்று சொன்னாள்.

அங்கு எல்லா ஆயத்தங்களும் முடிந்ததும் சந்தோஷ் வந்து எங்களை அழைத்துப் போனார். போனதும் அனிக்காவும் அனன்யாவும் தங்கள்
ஆசிரியர்களுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். சந்தோஷ் ஏனையோரை அறிமுகம் செய்து வைத்தார்.
 
அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும் குளிர் பானம் வழங்கப்பட்டு
விருந்து தொடர்ந்தது. தந்தூரி சிக்கன், கட்லட், நான் ரொட்டி, சிக்கன் கறி, பிரியாணி என்பன பரிமாறப்பட்டன. பின்னர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி கேக் வெட்டப்பட்டது. கேக் பரிமாறிய பின் கடந்த ஐந்து வருடங்களாக அனிக்காவைப் பராமரித்து வந்த ஆசிரியைகளைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சந்தோஷ்.பிறகு எல்லோரும் புறப்பட நாங்களும் புறப்பட்டோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் "பார்ட்டி பிடித்திருந்ததா?" என்று அனிக்கா
கேட்டாள். "நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
பெரும் மகிழ்ச்சி.

சனி, 23 ஜூலை, 2011

ஒரு தோழியும் ஒரு ரயில்ப்பயணமும்

முதலில் வருகை தருவோருக்கு வணக்கம். நீண்ட  நாட்களின் பின் ஒரு சிறு பதிவு போடலாம் என்று இந்தப் பக்கம் வந்தேன்.
கணணி முரண்டு பிடித்து விட்டதே தாமதத்திற்குக்  காரணம்.

நாங்கள் செய்த ஒரு சிறு  ரயில் பயணம் பற்றியது இப்பதிவு. நியூஸிலாந்தில் இது தான் எங்கள் முதல் ரயில்பயணம். 

எனது நண்பி ஒருவர், "வாருங்கள், நாங்கள் ஒருநாள் ரயிலிலும், ஒரு தடவை ferry  இலும் போய் வருவோம். உங்களை நான்
பக்குவமாக அழைத்துச் சென்று கொண்டு வந்து விடுவேன்,"
என்று அழைப்பதும் நாங்கள் மறுப்பதுமாக ஒரு வருடம்
ஓடி விட்டது.

சென்ற புதன் கிழமை, "நாளை போவோம்," என்றார்.
வழக்கம் போல் "காலநிலை நன்றாயில்லை; பின்னர் பார்ப்போம்,"
என்றேன்.

மறு நாள் காலை எங்கள் வீட்டிற்கு வந்தே விட்டார்.
மறுக்க முடியாமல் நாங்கள் புறப்பட்டோம். மழை கொட்டிக்
கொண்டிருந்தது.

நாங்கள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள பஸ் தரிப்பிடம் போகவும் பஸ் வரவும் சரியாயிருந்தது. வண்டியில் ஏறி இருந்ததும், "எங்களுக்கு இந்தப்பாதை பழக்கமில்லை ஆதலால் எங்கு இறங்க வேண்டும் என்பதைக்  கவனித்துக் கொள்ளுங்கள்," என்றேன். குறித்த இடம் வந்ததும் இறங்கி, குடையை ஒரு கையிலும் என்னை மறு கையிலும் பிடித்த படி என் கணவரிடம் "மெதுவே பார்த்து வாருங்கள்," என்றார்.
 புகையிரத நிலையத்தில் வண்டி புறப்படத் தயாராக நின்றது. பயணிகள் ஏறியதும் நடத்துனர் பிளாட்போர்மில் யாரும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டு கதவைப் பூட்டி சிக்னல் கொடுக்க வண்டி நகர்ந்தது.
 
அசைவது தெரியவேயில்லை. பயணிகள் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு.
அடுத்த  நிறுத்தத்தின் பெயர், எங்கே தரித்து நிற்கிறது என்பதெல்லாம் எதிரில் இருந்த கதவின் மேல் மாறி மாறி எழுத்தாய் ஓடிக்கொண்டிருந்தது.

பத்து நிறுத்தங்களின் பின் நாம் இறங்கினோம்.
 
சிறிது தூரத்தில் இருந்த நண்பி வீட்டுக்குப் போனோம். மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மகிழ்ச்சியாய்ப் பயணம் தொடங்கிற்று. மாலை மூன்று மணியளவில் புறப்பட்டு புகைவண்டி நிலையம் வந்து திரும்பவும் பஸ்சில் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.

  
தரிப்பிடம் வரும்வரை அடிக்கடி "பக்குவமாகப் போவீர்களா?' என்று கேட்டபடி வந்த தோழி, தான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தில் இறங்காது எங்கள் வீட்டிற்கு  அருகாமையில் இறங்கி வீடு வரை வந்து விட்டுப்போனார்.
 
"இப்படி ஏன் செய்கிறீர்கள்?" என்று கேட்க, "உங்களை மழை நாளில் அழைத்ததால் கவனமாகக் கொண்டு வந்து விட்டேன்," என்றார்.

சனி, 26 பிப்ரவரி, 2011

குட்டிப்பெண்கள்

விடுமுறை முடிந்து குட்டிப்பெண்கள் வந்தார்கள்.

தை  மாதம் ஐந்தாம்  திகதி இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சந்தோஷ்  (சிறுமிகளின் தந்தை) பேசினார். "ஆன்டி, உங்கள் திருமணநாள்.. பொன்விழாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள். நாங்கள் வரமுடியாது போய்விட்டது எல்லாம் நல்லவிதமாக முடிந்ததா?" என்று விசாரித்தார்.

"நீங்கள் எல்லோரும் நலமா? எப்போ வருகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நாங்கள் பன்னிரெண்டாம் திகதி இரவு ஒரு மணியளவில் வீடு வந்து சேர்வோம்," என்றார்.
போகும் போது வீட்டுத் திறப்பை எங்களிடம் தந்திருந்தார்கள். அவர்கள் வர இரண்டு நாட்களுக்கு முன்பாக  வீட்டைத்   திறந்து  சிறிது சுத்தம் செய்து குளிர்சாதன ப் பெட்டியையும் சுத்தப்படுத்தி வைத்தேன்.
main switch  அணைக்கப்பட்டிருந்தது. அது இருக்குமிடம் தெரியாததால் சனிக்கிழமை இரவு சாமத்தில் எழுந்து torch light, திறப்பு என்பவற்றுடன் அவர்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மணிக்குக் கதவருகில் வந்த குட்டிகள் நின்று விட்டார்கள். நான் கதவைத் திறந்தவுடன் "கிராண்ட்மா" என்று கட்டியணைத்தார்கள். இரண்டு மாதங்களின் பின் அவர்களைக் கண்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அனன்யா, "கிராண்ட்பா.. லொலிப்பொப்" என்று கேட்டாள். நாளை தரலாம் என்று சமாதானப்படுத்தி அவர்கள் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டோம்.
இப்போதெல்லாம் சின்னப் பெண்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள்.