புதன், 24 ஆகஸ்ட், 2011

அனிக்கா பாடசாலை போகிறாள்

ஐந்தாவது பிறந்த நாள் முடிந்து அனிக்கா பாடசாலை போவதற்கு ஆயத்தமாகிவிட்டாள். 
 
ஏற்கனவே மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாள் 'school visit' என்று ஒரு மணித்தியாலம் பயிற்சி கொடுக்கப்பட்டது.
 
முதல் இரண்டு வாரங்கள் இரண்டு மணிக்குப் பாடசாலை முடிவதால்
அந்த இரண்டு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அனிக்காவை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார். ஆசிரியருக்கு எங்களை அறிமுகப்படுத்துவதற்காக  முதல் நாள்  போகையில் எங்களையும் அழைத்துப் போவதாகச் சொன்னார்.
முதல் நாள்  காலை எட்டரை மணிக்கு நாங்கள் தயாராக இருந்தோம். குழந்தைகள் வந்து அழைத்தார்கள். காரில் ஏறியதும் பக்திப்பாடல் ஹிந்தியில் ஒலிபரப்பவும் இருவரும் இணைந்து அழகாகப் பாடினார்கள்.
 
மூன்றே நிமிடத்தில் பாடசாலை வந்தது. உள்ளே போனதும் ஆசிரியையிடம், "இவர்கள் எனது க்ராண்ட்மாவும் க்ராண்ட்பாவும். இவர்கள்தான் இன்று என்னை அழைத்துப் போவார்கள்," என்று அனிக்கா சந்தோஷை முந்திக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்தினார். புத்தகப்பையிலிருந்து தேவையானவற்றை எடுத்தபின் புத்தகப்பையை கொழுவுவதற்கு வகுப்பிற்கு வெளியே பெயர்களோடு இடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. கொழுவ வேண்டிய இடத்தில்
கொழுவி விட்டு அனிக்காவை உள்ளே அழைத்து சென்றார் ஆசிரியை.
நாங்கள்  வீட்டுக்கு வந்தோம்.
 
பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக பாடசாலைக்குப் போனோம். பிள்ளைகள் எல்லோரும் வெளியே அமர்ந்திருந்தார்கள். அனிக்கா ஆசிரியையிடம் நாங்கள் வந்துவிட்டதை அறிவிக்க அவர் வெளியே வந்து புத்தகப்பையில் எல்லாவற்றையும் வைக்கச் செய்து எங்களுடன் அனுப்பி வைத்தார். 

அனிக்காவும் சந்தோஷும் எங்களுடன் பழகிய விதம் அவருக்கு நாங்கள் அவளது குடும்ப உறவினர் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அவரது "You are lucky to have your grandparents  here,"  என்ற வார்த்தைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. 
 
அனிக்கா மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தாள். கதவைத் திறந்ததும் புத்தகப்பையை அதன் இடத்தில் கொழுவிவிட்டு; சப்பாத்தைக் கழற்றி அதனிடத்தில் வைத்து விட்டு அறைக்குள் மறைந்து விட்டாள். சிறிது நேரத்தில் உடை மாற்றி வெளியே வந்து, "கிராண்ட்மா எனக்கு இந்த உடைகளைக் கொழுவ உதவி செய்யுங்கள்," என்று கேட்டு அதையும் கொழுவிவிட்டு புத்தகப்பையைத் திறந்து செய்த வேலைகள் எல்லாவற்றையும் காட்டினாள். பின் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து சுத்தமாகக் கழுவித் துடைத்து வைத்தாள். மேசையில் இருந்த பிஸ்கட் இரண்டை எடுத்துச் சாப்பிட்டபின் தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
 
அனிக்கா வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த விதம் எங்களை வியப்படையச் செய்தது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அனிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள்

கடந்த இருபத்து நாலாம் தேதி அனிக்காவிற்கு ஐந்தாவது பிறந்த நாள்.
'Gate Way' என்னும் உணவகத்தில் 'party ' ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அனிக்கா  அழைக்கத் தொடங்கி 
விட்டாள்.

பிறந்த நாள் அன்று காலை வாழ்த்தலாம் எனத் தொலை பேசியில் அழைத்தேன். அனன்யாவின் குரல் கேட்டது, "கிராண்ட்மா நமஸ்தே!
இன்று அனிக்காவின் ஐந்தாவது பிறந்த நாள்." "ஆம், அனிக்காவிடம்
ரிசீவரைக் கொடுங்கள்." என்றேன்.

அனிக்கா வாங்கியதும் வாழ்த்தினேன். "நன்றி, நீங்கள் இன்று மாலை வரவேண்டும்." என்றாள். "எங்களிடம் கார் இல்லையே! நாங்கள் எப்படி வருவது? ஒரு காரில் ஆறு பேர் போக முடியாதல்லவா?" என்றேன்.

"எங்கள் காரில் ஏழு பேர் போகலாம். பப்பாவும் க்ராண்ட்பாவும் முன்னால் இருக்க நீங்கள் எனக்கும் அனன்யாவிற்கும் நடுவிலும் மம்மா பின்னாலும் உட்காரலாம்." என்றாள்.
மாலை நாலு மணிக்கு சந்தோஷ் கேக் பெட்டியைக்  கொண்டு வந்து
எங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து  விட்டு, "ஆறு மணிக்கு
தயாராயிருங்கள் போகலாம்." என்றார்.
ஆறு மணிக்கு வந்தவர் "ஆன்டி, இப்போ அங்கிள் என்னோடு வரட்டும்,
நீங்கள் எங்கள் வீட்டில் இருங்கள். நான் திரும்ப வந்து உங்கள்
எல்லோரையும் அழைத்துப் போகிறேன்." என்று சொல்லி கேக்
 பெட்டியையும் எடுத்துப் போனார்.

நான் அவர்கள் வீட்டில் போய் இருந்தேன். அனிக்கா அருகில் வந்து, "கிராண்ட்மா, அங்கு எங்கள் ஆசிரியர்களும், மம்மா பப்பாவின் நண்பர்களும் வருவார்கள்." என்று சொன்னாள்.

அங்கு எல்லா ஆயத்தங்களும் முடிந்ததும் சந்தோஷ் வந்து எங்களை அழைத்துப் போனார். போனதும் அனிக்காவும் அனன்யாவும் தங்கள்
ஆசிரியர்களுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். சந்தோஷ் ஏனையோரை அறிமுகம் செய்து வைத்தார்.
 
அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும் குளிர் பானம் வழங்கப்பட்டு
விருந்து தொடர்ந்தது. தந்தூரி சிக்கன், கட்லட், நான் ரொட்டி, சிக்கன் கறி, பிரியாணி என்பன பரிமாறப்பட்டன. பின்னர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி கேக் வெட்டப்பட்டது. கேக் பரிமாறிய பின் கடந்த ஐந்து வருடங்களாக அனிக்காவைப் பராமரித்து வந்த ஆசிரியைகளைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சந்தோஷ்.பிறகு எல்லோரும் புறப்பட நாங்களும் புறப்பட்டோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் "பார்ட்டி பிடித்திருந்ததா?" என்று அனிக்கா
கேட்டாள். "நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
பெரும் மகிழ்ச்சி.