சனி, 8 மே, 2010

இது இன்னொரு மாணவர் பற்றிய நினைவுகள்

















சுஜன்
முதல் நாள் பாடசாலைக்கு வந்த போது ஏனைய மாணவர்களைப்போல் அழவில்லை ஆயினும் முகத்தில் மகிழ்ச்சியில்லை. என் அருகிலேயே நின்றார். சிறிது நேரம் கழிந்ததும் "நான் வீட்டுக்குப் போக வேண்டும். போனில் அப்பாவை அழையுங்கள்." என்றார். "நீங்கள் போய் இடத்தில் இருங்கள். சிறிது நேரத்தில் வெளியே போய் விளையாடலாம்." என்றேன். அவர் அசைவதாயில்லை. தொடர்ந்து வந்த நாட்களிலும் தனது நாற்காலியை என் பக்கமாகப்போட்டுக்கொண்டிருந்து விட்டார்.

அடுத்த
வாரத்தின் முதல்நாள், பாடசாலை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடை பெற்றது. சுஜன் திடீரென ஆசிரியர்களின் அறைக்குள் நுழைந்து எனக்குப் பக்கத்தில் நின்று விட்டார். மெதுவாக அவரை வெளியே அழைத்துப் போய் வகுப்பில் இருக்கும்படி சொல்லி விட்டு வந்திருந்தேன். சற்று நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் திரும்பிப் பார்க்கவே நானும் திரும்பினேன். இவர் என் பின்னே யன்னல் அருகில் வெளியே நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்துப் பல முறை சொன்னபின் ஒருவாறு முதல் வரியில் அமரத் தொடங்கினார். அதுவும் பாடசாலை முடிந்ததும் வீட்டிலிருந்து யாரேனும் வருகிற வரை நான் அவரோடு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடுதான்.

இரண்டு
மாதங்கள் கடந்து விட்டன. அன்று எனது மகனுக்குக் கடுமையான காய்ச்சல். மருந்தைக்கொடுத்து விட்டுத் தேவையானவைகள் யாவும் எடுத்து வைத்து விட்டுப் பாடசாலை போனேன். மதிய இடைவேளையின் போது இவரை அதிபரின் அறையின் முன் இருக்க விட்டு அவசரமாக வீட்டுக்குப் போனேன். எங்கள் தெருவை அண்மித்ததும் பின்னால் யாரோ தொடர்வது தெரிந்து திரும்பினால், சுஜன் நிற்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு அழைத்துப் போனேன். காய்ச்சலோடு இருந்த மகன்தான் சைக்கிளில் கொண்டு போய் விட்டார். திரும்ப வந்தவுடன் அவரைக் கவனித்து விட்டு அவசரமாகப் பாடசாலை திரும்பினேன்.

நான்கு
மாதங்கள் கடந்த பின் ஒரு சனிக்கிழமை அவருடைய சித்தப்பா வந்து எங்களை அவர்கள் வீட்டுக்கு மதிய உணவுக்கு மறுக்காமல் வரும்படி அழைத்தார். சம்மதமானால் தானே வந்து அழைத்துப் போவேன் என்றார். அங்கு போனதும்தான் அவர் இப்படி இருப்பதற்கான காரணம் புரிந்தது. வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, அத்தைமார்களோடு ஒரு தம்பியும் தங்கையும் இருந்தார்கள். சிறியவர்கள் இருந்தும் இவர் வீட்டில் செல்லப்பிள்ளை. இவர் சொல்வதெல்லாமே அங்கு நடக்கும்.

அது
முதல் அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்து கொள்வோம். கிட்டத்தட்ட நெருங்கிய உறவுகள் போலாகி விட்டோம்.

இப்போ திருமணம் செய்து தந்தையாகக் காத்திருக்கிறார் இவர். அவர்கள் இன்றும் எங்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விடயம்.

10 கருத்துகள்:

  1. அன்னையர்தின வாழ்த்துக்கள் செபாம்மா.நலமா.முதலில் நீங்க என்னை மன்னிக்கவும் தாமதமாக வருவதற்கு.
    உங்க பதிவுகள் எல்லாமே நான் வாசித்து வருகிறேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் எனக்கும் ஏற்பட்டது.நான் நர்சரி ஸ்கூல் டீச்சராக இருந்தேன்!.
    அனுபவம் உங்க எழுத்தில் கூட தெரிகிறது.நன்றி செபாம்மா.தொடர்ந்து எழுதுங்கள். கூடவே உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. செல்ல பிள்ளையின் அன்புத் தொல்லை .

    கூட்டுக் குடும்பத்தில் பாசம் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த காலத்தில் பாசம் டெலிவிசனில் , சீரியலில் மட்டுமே கிடைக்கிறது.

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. அம்முலு,
    அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் என் நன்றி. நான் நலம்.இன்னும் பல சுவையான மறக்க முடியாத அனுபவங்களுண்டு. மெதுவாக எழுதுவேன்.
    அன்புடன்,
    செபா.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெய்லானி.
    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. காலை முதல் இரவு வரை ஓட்டமும் நடையுமாக வாழும் இக்கால மக்களுக்குப் பாசத்தைப் பகிர்ந்து கொள்ள நேரமேது?

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நெகிழ்ச்சியான அனுபவம் செபா ஆன்டி! படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு...

    பதிலளிநீக்கு
  6. இலா தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. செபா ஆன்டி, நல்ல சுவாரஸியமாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ.

    பதிலளிநீக்கு
  8. வானதி,
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றி.
    தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பதிவில் கமெண்ட் பாக்ஸ் கானவில்லை அதனால் இதில் போடுகிறேன்

    ###########################################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

    http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
    அன்புடன் >ஜெய்லானி <
    #############################################

    பதிலளிநீக்கு
  10. ஜெய்லானி,
    நீங்கள் அளித்த விருதுக்கு நன்றி.
    கணனி உபயோகிப்பதில் தடங்கல் ஏற்பட்டதால் உடன் பதிவு போட முடியவில்லை.
    அன்புடன் செபா.

    பதிலளிநீக்கு