வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பேரனும் பீஷும்

ஒரு முறை இனக்கலவரம் ஏற்பட்டபோது எங்கள் பகுதியிலிருந்த மக்கள் எல்லோருமே பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த நான்கு குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் தங்கி இருந்தோம்.

சுற்றி வர எங்குமே வெறிச்சோடிக்கிடந்தது. தூரத்தில் வீடுகள் எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டம். கோழிகள், ஆடுகள், பூனைகள் போன்ற பிராணிகள் உணவு தேடி அங்குமிங்குமாக அலைந்து  திரிந்தன.

எங்கள் பேரன் நன்கு பேசத்தொடங்கிய காலம்; "மியாவ், மியாவ்" என்று பரிதாபமாக ஒலி எழுப்பிற்று ஒரு பூனைக்குட்டி. பேரன் ஓடிப்போய்ப் பார்த்தார். மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்த அந்தப் பூனைக்குட்டியைப் பார்த்ததும் அதன் மேல் இரக்கம் ஏற்பட்டு மேதுவாகத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.
 " பாவம் இதற்குச் சரியான பசி. ஏதாவது சாப்பாடு கொடுக்க வேண்டும்," என்றார்.
 
அவர் விருப்பப்படியே உணவு கொடுத்து, "இதனை விட்டுவிடுவோம்," என்றோம்.

அதைத்  துரத்தி விடுவதில் அவருக்கு இஷ்டம் இல்லை. "இந்த 'பீஷ்'  (Beesh - அவர் பூனைக்கு வைத்த பெயர்.) சாப்பாடில்லாமல் செத்துப் போகும். நாங்களே வளர்ப்போம்," என்று எல்லோரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பூனைக்குட்டியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பூனை முனகலுடன் படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்த போது ஒரு காலில் கணுக்காலின் கீழே வீங்கிக் கிடந்தது. 
 
தெரிந்ததும் பேரன் அழ ஆரம்பித்து விட்டார். அவரைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகி விட்டது.

சற்று நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாட்டனிடம் முறையிட்டார். பூனையின் காலைப் பார்த்ததும் புரிந்து போனது. அதன் காலில் 'rubber band' மாட்டி இருந்தது. அதை அறுத்து விட்டதும் பூனை அமைதியாயிற்று.

பேரனும் சந்தோஷம் அடைந்தார். அது பூனையின் காலில் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

7 கருத்துகள்:

 1. அருமையான நினைவு கூறல்.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. //தெரிந்ததும் பேரன் அழ ஆரம்பித்து விட்டார். அவரைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாகி விட்டது.//

  அதுதான் குழந்தையின் மனசு...!!!

  பதிலளிநீக்கு
 3. செபா மேடம், நலமா? உங்க பேரன் மாதிரிதான் என் மகனும் இதுபோல் ரொம்ப இரக்க குணம்!(இந்தியா சென்றிருக்கும்போது)தெருவில் செல்லும் ஆடு, மாடு, பூனைகள் மீது அக்கம் பக்கத்து பசங்க யாரும் கல்லெறிந்துவிட்டால், அவர்களிடம் சத்தம் போட்டுவிட்டு, எங்களிடம் வந்துசொல்லி கண்கலங்குவார்! :)

  பதிலளிநீக்கு
 4. அஸ்மா.
  நல்வரவு. கருத்துரைக்கு நன்றி.
  குழந்தைகள் மனதில் இரக்க சுபாவம் அதிகம் மற்றவர், ஏன் பிராணிகள் கஷ்டப்பட்டால் கூடத் தாங்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு