ஐந்தாவது பிறந்த நாள் முடிந்து அனிக்கா பாடசாலை போவதற்கு ஆயத்தமாகிவிட்டாள்.
ஏற்கனவே மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாள் 'school visit' என்று ஒரு மணித்தியாலம் பயிற்சி கொடுக்கப்பட்டது.
முதல் இரண்டு வாரங்கள் இரண்டு மணிக்குப் பாடசாலை முடிவதால்
அந்த இரண்டு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அனிக்காவை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார். ஆசிரியருக்கு எங்களை அறிமுகப்படுத்துவதற்காக முதல் நாள் போகையில் எங்களையும் அழைத்துப் போவதாகச் சொன்னார்.
முதல் நாள் காலை எட்டரை மணிக்கு நாங்கள் தயாராக இருந்தோம். குழந்தைகள் வந்து அழைத்தார்கள். காரில் ஏறியதும் பக்திப்பாடல் ஹிந்தியில் ஒலிபரப்பவும் இருவரும் இணைந்து அழகாகப் பாடினார்கள்.
மூன்றே நிமிடத்தில் பாடசாலை வந்தது. உள்ளே போனதும் ஆசிரியையிடம், "இவர்கள் எனது க்ராண்ட்மாவும் க்ராண்ட்பாவும். இவர்கள்தான் இன்று என்னை அழைத்துப் போவார்கள்," என்று அனிக்கா சந்தோஷை முந்திக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்தினார். புத்தகப்பையிலிருந்து தேவையானவற்றை எடுத்தபின் புத்தகப்பையை கொழுவுவதற்கு வகுப்பிற்கு வெளியே பெயர்களோடு இடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. கொழுவ வேண்டிய இடத்தில்
கொழுவி விட்டு அனிக்காவை உள்ளே அழைத்து சென்றார் ஆசிரியை.
நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.
பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக பாடசாலைக்குப் போனோம். பிள்ளைகள் எல்லோரும் வெளியே அமர்ந்திருந்தார்கள். அனிக்கா ஆசிரியையிடம் நாங்கள் வந்துவிட்டதை அறிவிக்க அவர் வெளியே வந்து புத்தகப்பையில் எல்லாவற்றையும் வைக்கச் செய்து எங்களுடன் அனுப்பி வைத்தார்.
அனிக்காவும் சந்தோஷும் எங்களுடன் பழகிய விதம் அவருக்கு நாங்கள் அவளது குடும்ப உறவினர் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அவரது "You are lucky to have your grandparents here," என்ற வார்த்தைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.
அனிக்கா மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தாள். கதவைத் திறந்ததும் புத்தகப்பையை அதன் இடத்தில் கொழுவிவிட்டு; சப்பாத்தைக் கழற்றி அதனிடத்தில் வைத்து விட்டு அறைக்குள் மறைந்து விட்டாள். சிறிது நேரத்தில் உடை மாற்றி வெளியே வந்து, "கிராண்ட்மா எனக்கு இந்த உடைகளைக் கொழுவ உதவி செய்யுங்கள்," என்று கேட்டு அதையும் கொழுவிவிட்டு புத்தகப்பையைத் திறந்து செய்த வேலைகள் எல்லாவற்றையும் காட்டினாள். பின் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து சுத்தமாகக் கழுவித் துடைத்து வைத்தாள். மேசையில் இருந்த பிஸ்கட் இரண்டை எடுத்துச் சாப்பிட்டபின் தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
அனிக்கா வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த விதம் எங்களை வியப்படையச் செய்தது.