இவை ஒரு குட்டி மாணவரின் குறும்புத்தனங்கள்.
இந்த மாணவர் பெயர் கோகுலன். முதலாம் ஆண்டு படித்தார். ஒரு நாள் பாடசாலை போனதும் கரும்பலகையை அழிப்பதற்கு duster ஐத் தேடினேன் காணவில்லை. மேசை துடைப்பதற்கென வைத்திருந்த துணியை எடுத்து உபயோகித்தேன்.
மாலையில் வீட்டில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். கோகுலனின் அக்காமார் இருவரும் வந்து படிப்பார்கள். அன்றும் அவர்கள் வந்தார்கள். படித்து முடிந்ததும் அழைத்துப் போக வருபவருக்காகக் காத்துக்கொண்டு நிற்கும் வேளை ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அவர்கள் வீட்டில் என்ன சமையல், யார் வந்தார்கள், என்ன நடந்தது என்று சொல்லிக் கொண்டிருந்த போது, "டீச்சர், கோகுலன் இன்று வகுப்பு duster ஐ வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து கழுவிக் கூரை மேல் காயப் போட்டிருக்கிறார்," என்றார்.
"ஏன் அப்படிச் செய்தார்?" என்று கேட்டேன். "அதுவா! கெதியாக எங்கள் வீட்டில் குட்டிப் பாப்பா வரப் போகுது. அதற்குத் தலையணைக்குத்தான்," என்றார்கள்.
மறு நாள் பாடசாலையில் விசாரித்தேன். அது தனக்கு வேண்டும், தனக்கு வேண்டும் என்றார். இரண்டு வாரங்களின் பின் தம்பிப் பாப்பா பிறந்து விட்டார் என்ற செய்தியோடு வந்தார்.
"சரி, பாப்பாவிற்கு என்ன பெயர்?" என்று கேட்டேன். "டீ பன்" (தீபன்) என்றார். அன்று முதல் "தம்பி பெயர் என்ன?" என்பதும், அவர் "டீ பன்" என்பதும் சகஜமாகி விட்டது.
இன்னொரு நாள் இடைவேளையின் போது, ஒரு பெரிய வகுப்பு மாணவரை அழைத்து கன்டீனில் எனக்குத் தேனீர் வாங்கி வரும்படி அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் தேனீருடன் வடையும் கொண்டு வந்து நான் கொடுத்த பணத்தையும் திரும்பத் தந்தார். "கோகுலன் பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்குப் போய்த் தேனீரும் கூடவே சாப்பிடவும் ஏதாவதும் வாங்கி வரும்படி சொன்னார்," என்றார்.
இந்தக் கதையில் வரும் குழந்தைகள் நான்கு பேரும் பிற்பாடு நாட்டு நிலமை காரணமாகப் பெற்றோருடன் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.